குமரேச சதகம் – ஒன்றில்லாமையால் சிறக்காதவை - பாடல் 63

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கொங்கையில் லாதவட் கெத்தனைப் பணியுடைமை
கூடினும் பெண்மையில்லை
கூறுநிறை கல்வியில் லாமலெத் தனைகவிதை
கூறினும் புலமையில்லை

சங்கையில் லாதவர்க் கெத்தனை விவேகம்
தரிக்கினும் கனதையில்லை
சட்சுவை பதார்த்தவகை உற்றாலும் நெய்யிலாச்
சாதமும் திருத்தியில்லை

பங்கயம் இலாமல்எத் தனைமலர்கள் வாவியில்
பாரித்தும் மேன்மையில்லை
பத்தியில் லாமல்வெகு நியமமாய் அர்ச்சனைகள்
பண்ணினும் பூசையில்லை

மங்கையர் இலாமனைக் கெத்தனை அருஞ்செல்வம்
வரினும்இல் வாழ்க்கையில்லை
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 63

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

கொங்கையில்லாத பெண்ணுக்கு எவ்வளவு அணிகளும் ஆடைகளும் இருந்தாலும் பெண்மையின் அழகு வராது. புகழத்தக்க நிறைந்த கல்வி யில்லாமல் எவ்வளவு செய்யுள் இயற்றினாலும் புலமையாகாது;

நாணம் இல்லாதவர்களுக்கு எத்துணை அறிவிருப்பினும் பெருமையுண்டாகாது; அறுசுவைக் கறிகளிருந்தாலும், நெய்யில்லா வுண்டி மனநிறைவு தராது;

தாமரை மலர் இல்லாமல் வேறு எத்துணைப் பூக்கள் பொய்கையில் நிறைந்தாலும் உயர்வில்லை; அன்பின்றி மிக ஒழுங்காக மலரிட்டு வணங்கினாலும் வழிபாடாகாது;

மனைவியர் இல்லாத இல்லத்திற்கு எவ்வளவு அரிய செல்வம் வந்தாலும் இல்லறம் ஆகாது.

கருத்து:

எப்பொருளும் அதனைச் சிறப்பிக்கக் கூடிய ஒன்று இல்லாவிடின் மேன்மையுறாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jun-20, 8:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே