6 அவளுடன் பேசும்போது

__________________

மார்க்கெட்டில் நான் காய்கறிகள் வாங்கும் போது என் முதுகில் யாரின் கை படுவதோ தெரிந்தது.

அவள்தான்...

கையில் கூடையில் காய்கறிகளுடன். அவளிடமிருந்து அதை நான் வாங்கி வைத்து கொள்ள பின் நடந்தோம்.

இது பார்த்தீர்களா... ஸ்பரி...

மொபைலை தட்டி பக்கங்களை புரட்டி ஒன்றை சுட்டிக்காட்டினாள்.

அதில் சுமி என்னும் தோழர் "இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் உன்னையே நீ நடிக்கவைத்து பார்க்கின்றாயோ" இப்படி ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

நான் முன்பே இதை படித்து பதில் சொன்ன ஒன்றுதான் அது.

இதில் என்ன உள்ளது அவர் கேட்டிருக்கிறார். அவ்வளவுதான்...

அவ்வளவுதானா? ஸ்பரி. நீங்களும் நானும் வேறா? அது எப்படி?

என் நிழலை விஞ்ஞானம் ஒரு தடயமாக்கி கொள்ள முடியும்தானே?

ம்ம்ம்..

ஆனால் மனதின் பரிமாணங்களை அது நுனியளவும் அறியாது. நீ எனக்கு ஆயிரம் பாதைகளில் ஒரு பாதை...
நானும் உனக்கு அப்படித்தான். வாலிபம் முதல் வயோதிகம் வரை கொஞ்சி கொண்டிருக்கும் முதிய தம்பதிகளும் கூட தங்களுக்குள் அப்படியேதான்.

எல்லோருமே அவர்கட்கு மற்றவர்கள் என்பது வெறும் பாதைகள் மட்டும்தானா? உயிர்ப்பு என்பது இருக்கிறது ஸ்பரி... அதை விட்டுவிட்டு தத்துவங்கள் உண்டா?

நாம் வெறும் பாதைகள் மட்டுமே... ஒரு போய் முடிந்த பாதையில் இப்போது நாம் போகிறோம். அதில் நாளை யாரும் வரலாம். அல்லது மூடப்பட்டு முடியலாம்.

புரியவில்லை... ஸ்பரி...

இன்று நீ கேள்விகள்... நான் பதில்கள்... நாளை நீ பதில்கள்... நான் கேள்விகள்...

நம்மை நாம் நமக்குள் இப்படி கேட்டும் சொல்லியும் சொற்களால் பரஸ்பரம் இறுக்குகிறோம். ஒரு எல்லைக்கு அப்பால் பிரிந்து கலைகிறோம். நம் சொற்கள் கூடற்று திசையின்றி பறக்கின்றன.

இது தேடல்தானே... நீங்கள் இதில் ஆர்வம் கொண்டவரும் கூட...

தேடல்கள் இயல்பாக ஒரு மௌனத்தில் கலந்து மறைந்து போய் விட்டால் நீ பிறகு என்ன செய்வாய்?

அவள் அமைதியாக இருந்துவிட்டு கேட்டாள்.

ஸ்பரி... என்ன செய்யவேண்டும்?

நிச்சயம் நாம் ஒன்றும் செய்யமுடியாது. அப்படித்தான் இப்போது தோன்றுகிறது. உண்ணப்பட்ட உணவுக்கு என்ன வடிவம் தர முடியும்? இதில் நீ ஆன்மீகம் கொண்டு பார்க்க வேண்டாம்.

அப்படியெனில் நாம் தேடல்கள் என்பதை இனி நிறுத்தி விடுவோமா?

அவளை பார்த்தேன்.

"பின் உன் பாதையில் யார் நடப்பது"?

ஆம்...நீங்கள் சொல்வதுதான்... தேடவும் பாதைகள் வேண்டும் அல்லவா?

வீட்டை நெருங்கி விட்டதால் வேறு வேறு பாதையில் நாங்கள் செல்லலானோம்.

🌴🌴🌴🌴🌴

எழுதியவர் : ஸ்பரிசன் (27-Jun-20, 11:04 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே