எனக்குள் நீ

எனக்குள் நீ!

கீழைக் கடல் எழுந்து
மேலைக் கடல் விழுந்து
ஒளி கொட்டி
இருள் அள்ளிச் செல்லும்
கதிரவனும்

ஆழி மடி ஆடி
அண்டு கரை தேடி
அயற்சி அற்று
முயற்சிவுற்று
கணம் தொட்டு மீளும்
அலைகளும்

பனி உடை சூடி
குளிர் தளிர் ஊட
முகடது வான் முகர
எழில் மேனி கார் நகர
வாஞ்சைமிகு மறவன் என
சிரம் நிமிர்ந்த மலைகளும்

பார்வை தொட்டு
பசு(ம்) மை இட்டு
மெல் பட்டெனத் தொடுத்து
புவி இடை மறைத்து
நம் உள்ளம் அள்ளி
உவகை தள்ளப் படர்ந்திருக்கும்
புல் வெளிகளும்

மணம் குளித்து
மது குடித்து
இதழ் குவித்த
குளவி கண்டு
இமைத்த கண் நிறுத்தி
விடை மறுத்த
மலர் சொரி கானகமும்

தடை தகர்த்து
தனித் தடம் சமைத்து
சங்கமிக்க கடல் தேடி
காடறுத்த காட்டாற்றின்
கட்டவிழ்ந்த ஓட்டமும்
நாளும் செப்பிடுதே
மனிதா
எனக்குள் நீயென்று. . . .

சு. உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (28-Jun-20, 9:21 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : enakkul nee
பார்வை : 232

மேலே