அமைதி எங்கே

அமைதியைத் தேடி

அமைதியை அள்ளி வர
அலைகின்றேன் அலைகடலோரம்
மனம் மீள்கிறது
ஏனோ புயல் கண்ட புனலாய்!

குளிர்ப்பூட்டும் கோடை வாசல்-அது
சாவியிட்டும்
திறக்கவில்லை- ஏனோ
சாத்திக் கொண்ட மனக்கதவு!

விழியிரண்டை ஊற வைத்தேன்
சோலைகளின் பசுமைதனில்
சாயமுற்ற விழித்திரையோ
காட்சிப் படுத்துகிறது காரிருளை!

பல வண்ண ஆடைகளால்
அழகு படுத்திய என் உருவம்
நிலைக் கண்ணாடியில் காண்கிறது
நிழலாகிப் போன வெறுமையை!

வெம்பிப் போன
சுவை மொட்டுக்களை
உயிர்ப்பூட்ட இயலா உண்டியதோ
செரித்துச் சிதைகிறது வீணாய்!

அபிசேகங்களும் ஆராதனைகளும்
அமைதியை அருளும்
வல்லமை இழந்ததாய்
தன்னை குறை கூறிக் கொள்கின்றன!!

அமைதி எங்கே?
”நான்” தொலைந்தால் கிட்டும் என
ஆழ்மனதுக்குள் ஓர் அசரீரி ஒலித்துக் கொணடே……..
சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (29-Jun-20, 1:55 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : amaithi engae
பார்வை : 169

மேலே