8 அவளுடன் பேசும்போது

_____________________

மதிய உணவுக்கு பின்னால் நான் அவள் வீட்டுக்கு போனேன். குட்டிகள் இரண்டும் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தன.

அவள் ஓர் துண்டு பிரசுரம் எடுத்து கொடுத்தாள்.

ஆழப்புழை டூர் பாக்கேஜ் மார்ச் மாதம் வருகிறதாம்... நாம் போகலாமா ஸ்பரி? என்று அவள் கேட்டதும் எனக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது.

பொதுவில் தனிமை விரும்பி அல்லவா நீ?

ஆம்... இருந்தாலும் அது மொழியறியாத புது இடம் அல்லவா? நீர்நிலை மிக்கது. நம் அறிவை பயணங்கள் விரிவு செய்யுமே... அதற்குத்தான் கேட்டேன் என்றாள்.

உண்மைதான்... என்று சொல்லி விட்டு அமைதியாக இருந்தேன்.

நேரங்கள் கடந்து போனது.

சொல்லுங்கள் ஸ்பரி. இந்த பயணம் வேண்டாம் என்றால் தவிர்த்து விடலாம்.

இல்லை. அதுவல்ல நான் யோசிப்பது நீ அறிவை பயணங்கள் விரிவு செய்யும் என்றாய் அல்லவா?

ஆமாம். அதில் என்ன?

எந்த அறிவை? எது பற்றிய அறிவை?அதுதான் யோசிக்கிறேன். உனக்கு நான் கேட்பது பற்றி புரிகிறதா?

இல்லை. நீங்கள் சொல்ல வருவது என்ன?

அறிவு என்பது நாம் நம்மளவில் தெரிந்து வைத்திருக்கும் ஒன்றா? அல்லது எது பற்றியும் முன்பே அறியாத ஒன்றா?

இரண்டிலும் நாம் நிலையற்று போன ஒரு சராசரி பயணிகள்தானே ஸ்பரி. மேலும்,
வாழ்க்கை எப்போதும் நம்மை காலத்தின் நொடிகளாய் மட்டும்தான் கவனத்தில் கொள்ளும். வாழ்க்கை என்பது வரலாறு படிப்பதும் இல்லை. வரலாற்றை எழுதுவதும் இல்லை என்று நீங்களே முன்பு ஒரு இடத்தில் எழுதியது உண்டே.

நான் அவளை பார்த்தேன்.

ஆனால் ஒரு பயணம்... அது எத்துணை பெரிதோ சிறிதோ... தன்னளவில் மனதையும் காலத்தையும் கலந்து காட்டி கொண்டிருக்கும் அனுபவம் அல்லவா?
அப்படி பார்க்க போனால், பயணங்களில் இயற்கையை ரசிக்க, மன அமைதிக்கு என்பது மாதிரியான சில குறிப்பிட்ட தேர்வுகளில் அதை முடக்கி விடுவது ஒரு விதத்தில் சில மனித நடைப்பிணங்களின் திட்டமிட்ட வணிக சூழ்ச்சிதானே?

நான் இப்படி கேட்டதும் அவள் முகம் கோபத்தில் சிவந்து விட்டது.

ஸ்பரி, நீங்கள் புத்தகங்களின் வறட்டு சிந்தனைகளுக்கு கொத்தடிமை. உங்கள் வாசற்கதவு திறப்பதே தூசிகள் கொண்டு வரும் காற்றுக்காக மட்டும்.. என்று அவள் கொதிக்க துவங்கினாள்.

பின் ஒரு தலையணையை மடியில் இழுத்து போட்டுகொண்டு ... Franz Kafka எழுதிய "A Hunger Artist" சிறுகதையை வாசிக்க ஆரம்பித்தாள்.

நான் ஒரு புன்முறுவலுடன் கிச்சனில் சென்று எங்களுக்கு வேண்டிய காஃபியை தயாரித்தேன்.


🎎 🎎 🎎 🎎

எழுதியவர் : தேடல் (29-Jun-20, 4:18 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே