கொரோனா தனிமை

எங்கள் வீடு இப்போது தனித்த தீவுத்திடல் போல.... வீட்டின் இருபுறம் பள்ளிக்கூடங்கள்... அவை நிரந்தரமாய் மூடி கிடப்பதால்...
எங்கும் மயான அமைதி குடிபுகுந்துவிட்டது....

சற்றுத் தொலைவில் இரயில் தண்டவாளங்கள்.... அவ்வப்போது கேட்கும் இரயில் பெட்டிகளின் இழுவை சத்தமும் இன்றி... சப்தநாடியும் ஒடுங்கிய பாலை இரவுபோல் எங்கள் பகுதி....
வெறிச்சோடிய வீதியை பார்த்துப் பார்த்தே, மனதில் ஒரு பீதி கிளம்புகிறது....
சிலநேரம் தொலைதூரம் கேட்கும் ஆம்புலன்ஸ் ஸைரன் ஒலி ஈரக்குலையை நடுங்க வைக்கிறது...
அத்திப் பூத்தாற்போல மனித நடமாட்டம்....
6மணிக்கு பால் போடுபவர்....
7 மணிக்கு துப்புரவு பணியாளர்...
8-9 மணிக்குள் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்...

வெறிச்சோடி கிடக்கும் வீதியில்
எப்போதாவது வரும் தள்ளுவண்டி வியாபாரியின் குரல்....
செவிமடுத்த மறுநிமிடம் சிறு குழவியாய் பலகணி நோக்கி ஓடுகிறது பாதங்கள்....தேவையோ இல்லையோ.... பார்ப்பவை அனைத்தையும் புதிதாய் பார்ப்பதுபோல் மலர்ச்சியில் விழிகள்......வேண்டியதோ?வேண்டாததோ?விலைபேசி வாங்கத் துடிக்கிறது மனது.....
அவர்களோ, என்னை வேற்றுகிரகவாசிபோல் பார்வைவீசி விரைவாய் கடந்து செல்வர்.... ஆனாலும் விடாமல் விரசாய் ஓடி உரக்கக் கத்தி அழைக்கிறேன்.....சில நேரம் அதிர்ஷ்டம் கை கொடுக்கும்... வீதியில் திரும்பியவர் கரிசனப்பட்டு திரும்பி வருவதுண்டு....

இன்று காலை அப்படியொரு அதிர்ஷ்டம் அடித்தது... அடுத்தத் தெருவிற்கு கடந்துவிட்ட வண்டி என் உரத்தக்குரல் கேட்டு திரும்பி வந்தது....

மனதில் ஒருசில விநாடிகளில் மகிழ்ச்சியின் துள்ளல்....
மாடியிலிருந்த வண்ணமே பேசினேன்....
தம்பி! திரும்பி வந்ததுக்கு தேங்க்ஸ்.... (வண்டியை தள்ளி வந்தவன் ஒரு பள்ளிப்பருவ சிறுவன்)
அவனும் சிரித்துக் கொண்டே.....
“என்னக்கா வோணும்.....?
வெண்டக்கா, மாங்கா,முருங்கக்கா, வாழக்கா, உருளகொழங்கு, பச்சமொளகா, எலுமிச்சம்பழம், சிறுகீர, இஞ்சி , கொத்தமல்லி, புதினா “என்று மூச்சுவிடாமல் அழகாய் ஒரு ஓசை நயத்தோடு அட்டுக்கிக் கொண்டே போனான்.....
நான் இடைமறித்து....
“நாலு எலுமிச்சம் பழம்... ஒரு கட்டு சிறு கீரை, கொத்தமல்லி ஒரு கட்டு” வேண்டும் என்றேன்..,,,

“அப்டியே பைய கீழ போடுங்கக்கா... அதுல போட்டுவிடுறேன்” சுட்டிப்பாய் பேசினான்.... கயிறு கட்டியப் பையை இறக்கினேன்.... நான் கேட்டதனைத்தையும் அவனே புரட்டி புரட்டி தேர்ந்தெடுத்து போட்டு , பையை தள்ளி... தூக்குங்கள் என சைகை செய்தான் ......பை மேல வந்ததும்... அனைத்தையும் கையில் பட்டும் படாமல் எடுத்து வைத்தேன்.... கொத்தமல்லியில் மட்டும் ஏகப்பட்டப் புல்லு.....

எட்டிப் பார்த்து சிறுவனிடம்....
ஏம்பா இது கொத்தமல்லி கட்டா? புல்லுக் கட்டா...? பாதிக்கு பாதி புல்லுதான் இருக்கு?
எவ்ளோ ஒருக் கட்டு? என்றேன்
பாஞ்சு ரூபாக்கா? அலட்டலாக பதில் சொன்னான்....

“தம்பி , நீ இத புல்லுக் கட்டுனே கூவி விக்கலாம்” என்று சற்று நையாண்டியாய் சொல்ல ....
“அக்கா வண்டில ஃபுல்லு கட்டிங்ளா வித்தா என்ன உள்ள புடிச்சிப் போட்ருவாங்க” என்று எகத்தாளமாக பதிலுரைத்தான்....

“சரி! சரி! நல்லாதான் பேசுற... ஓரங்கட்டி வச்சிருக்க மாஸ்க்க போடு முதல்ல” என்று எச்சரித்தேன்......
“இங்கதான் மனுசாளுங்களே இல்லியே...மெயின் ரொடுக்கா போனது போட்டுப்பேன்” என்று மிடுக்காய் பதில் சொன்னான்...
அவன் பேச்சை ரசித்துக்கொண்டே..... அவன் கேட்டப் பணத்தை கொடுத்து.... இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் நின்று குரல் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன் ... சிரித்தபடி தலையசைத்து சென்று மறைந்தான் ....

பாவம் இந்த சிறுவியாபாரிகளும்.... காலை இரண்டு மூன்று மணிக்கே வீட்டைவிட்டுப் புறப்பட்டு திருமழியிசைக்குச் சென்று காய்கறிகளை வாங்கிவந்து....இந்தக் கொரோனாவின் கொடூர அச்சுறுத்தலுக்கு நடுவில்..... நாமெல்லாம் பத்திரமாய் வீட்டுக்குள் இருக்க ..... இவர்கள் வீதியெங்கும் சுற்றி வந்து....நம் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள் ..... அதுவும் சொற்பலாபத்திற்கு..... இவர்களுக்கும் நாம் நெஞ்சார்ந்த நன்றிகள் சொல்வோம்..... பேரம்பேசாமல் சொன்ன விலைக்கு வாங்குவோம்... என்று மனதில் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு...... அடுத்த ஏதோ ஒரு முன்பின் அறியா குரலைக் கேட்க ஏக்கத்துடன் வீதியை பார்த்த வண்ணம் நான்.....

எழுதியவர் : வை.அமுதா (30-Jun-20, 10:17 am)
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே