போராட்டக்களம்

அன்று சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு பள்ளிக்கு சென்றுவிட்டேன்....பள்ளி விடுமுறை என்பதால் , அன்று பள்ளி வளாகத்தின் பின் பகுதியில் சுவர் எழுப்பி பெரிய இரும்பு கேட் வைக்க திட்டமிட்டுருந்தேன்.....

இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வேண்டிய செங்கற்கள், சிமெண்ட், பெரிய இரும்பு கேட் எல்லாம் வாங்கி ஆகிவிட்டது.... கட்டுவதற்கு அக்கம்பக்கம் உள்ள ஒவ்வொரு கொத்தனாராய் அழைத்துப் பேசினேன்.... எவரும் பணியை செய்ய முன்வரவில்லை....

“அட போங்க மேடம்...! நீங்க பாட்டுக்கு கட்ட சொல்லிட்டு போய்டுவிங்க... இந்த ஹவுஸிங் போர்டு ஜனங்க மொத்தமும் வந்து என்ன குமுக்கி எடுத்திரும்.... “ என்று அச்சத்தில் பதிலுரைத்து விலகிச் சென்றார்கள்.
நான் கூடவே நிற்பேன்... எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் , என்று தைரியம் சொல்லியும் எவரும் முன்வரவில்லை....
கடைசியில் என் ஆஸ்த்தான கொத்தனார்...குடித்து குடித்து உடல் நலம் குன்றி இருந்த செல்வத்தை அழைத்தேன்.....
அவர் குடித்து விட்டு கண்ணில் படும்போதெல்லாம் ஏசுவேன்.... சிரித்துக் கொண்டே ஒரு பெரிய வணக்கம் போட்டு சென்றுவிடுவார்

இன்று வெகுநாட்களுக்குப் பின் அவரை அழைத்ததால் மிகவும் தயங்கி தயங்கி என் அலுவலறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்தார்... என்னை நேரில் பார்க்க அச்சப்பட்டு குனிந்தத் தலையுடன் நெலிந்து கோணி நின்றார்.....
“என்ன கொத்தனார் எப்டி இருக்கிங்க....?” என்று நான் கேட்டதுதான் தாமதம் ... சற்று வெட்கப்பட்டுக் கொண்டே.....
நல்லா இருக்கேன் மேடம் என்றார்....
அழைத்தக் காரணத்தை சொன்னேன்....
”அதுகின்னாமா.... நாளிக்கு நீங்க பக்கத்துல இருப்பிங்களே....? அப்றம் எனுக்கு இன்னா பயம்...நான் கட்றேன்.... யாரு வந்தாலு பாத்துக்கலாம் “ என்று உற்சாகமாக பதில் சொன்னார்.... எனக்கும் மனதிற்கு ஆறுதலாக இருந்தது....
நாகலோகத்தில் பீமன் அருந்திய எட்டுக்குடம் நீரால் எட்டாயிரம் யானை பலம் கிடைத்தது போல், இந்த செல்வத்திற்கு தண்ணி உள்ளே போய்விட்டால் , அவர் பேச்சிலும் செயலிலும் பல்லாயிரம் யானை பலம் வந்துவிடும்.... அதனால் அவரை நம்பி வேலையில் இறங்கினேன்.....

அன்று அவர் காலையிலேயே பள்ளி வாயிலில் வந்து காத்திருந்தார்.... என்னைப் பார்த்தவுடன் சுறுசுறுப்பாக வேலையை தொடங்கினார்... சுவர் எழுப்ப அடியில் ஒன்றரை அடி தோண்டத் தொடங்கினார்... முதலில் ஒரு அந்தப்பகுதி பெண் செய்தித் தொடர்பாளர் பார்வையை வீசிச் சென்றார்... பத்து நிமிடத்திற்குள் ஒரு சிறு கூட்டம் கூடி, கொத்தனாரை விசாரணைக் கைதிபோல் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தது.....
இன்னா... செல்வம்?
இன்னா பண்ணினுருக்கிற...?
பதிலே உரைக்காமல் வேலையை தொடர்ந்தார் .... அவர் உடன் அழைத்துவந்த சித்தாள் பெண் ஒருபுறம் செங்கற்களை அவர் அருகில் வந்து வைத்துக் கொண்டிருந்தாள் .....

வந்தவர்கள் விடவில்லை ...
இன்னா செல்வம்... கேட்டுக்னே இருக்றேன்... தெனாவெட்டா நீ பாட்டுக்குனு செஞ்சினுக்றா....?
சத்தம் வந்தவுடன் .... நான் அங்கேயே நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டேன்.... நான் எதிர்பார்த்ததுபோல் மொத்த குடிசைமாற்றுவாரிய மக்களும் திரண்டு வந்துவிட்டனர்....
இன்னா மேடம்... இது இன்னா உங்க அப்பவூட்டு இடமா.... செவுரு கட்டப் போறியா.... சொல்லிய வண்ணம் கொத்தனார் கையை ஒரு பெண் பிடிக்க ... கட்டியவரை இருந்த செங்கலை மற்றவர்கள் காலால் எட்டி தகர்த்துக் கொண்டிருந்தனர்.... செல்வம் என்னை பார்த்தார்... நான் தொடருங்கள் என்று கண் அசைத்தேன்... அவர் அந்தப் பெண்ணிடமிருந்து கையை உதறிவிட்டு மீண்டும் பணியை தொடர்ந்தார்....
நாங்க காலங்காலமா இந்த வழியாதா போய்கினு வந்துகினு இருக்றோம்... அத்த அடைக்க உனுக்கு என்னா ரைட்ஸ் இருக்குது... இதோ இரு போலிஸ்க்கு போறேன் , என ஒருவன் பூச்சாண்டி காட்டினான்.... ( பள்ளியின் எல்லை இது ..... இதுவரை தடுப்பு இல்லாததால் பொதுவழியாகவே மாறிப்போனது....ஆதலால் பொதுமக்கள் பள்ளியில் மெயின் பில்டிங்கையே பொதுவழியாக பயன்படுத்தி வந்தார்கள்... பள்ளி நடக்கும் நேரங்களில்கூட.... பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மாநாடு போட்டு பேசுவார்கள் .... இவர்கள் மட்டுமல்ல ... இவர்கள் வளர்க்கும் பன்றி, நாய் , பூனை , ஆடு, மாடு, கோழியென அனைத்து ஜீவராசிகளும் வகுப்பறைக்குள் நுழையும் ... குடி போதையில் உள்ளே நுழைந்து ஆசிரியர்களையும் தரக்குறைவாக பேசுவார்கள்.......மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகிப்போனது.... அதனால்தான் எதிர்ப்பு வரும் என்று அறிந்தும் துணிந்து இந்தச் செயலில் இறங்கினேன்)

மொத்த மக்கள் கூட்டமும் என்னை சூழ்ந்து நின்று... அவர்களின் உச்சக்கட்ட சென்னை பாஷையில் என்னை ஏச..... முதலில் அவர்களை அமைதிபடுத்தி.... என் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துக் கூறினேன்..... பள்ளிக்கு ஏற்படும் இடையூறுகளை எடுத்துக் கூறினேன் ... செவிமடுக்க ஒருவர் கூட இல்லை....
அசிங்கமாக பேசி... ஏறியா குள்ள வருமுடியாம பண்ணிடுவோம்... கையை காலை எடுத்துருவோம்.... இன்னும் என்னென்னவோ மிரட்டல்..... பள்ளியை துப்புரவு செய்யும் ஆயா... பயந்து ,என்னிடம் வந்து கெஞ்சியது..... வேணாம்மா.... கொலகாரப்பாவிங்க.... எதாவது செஞ்சிடப் போறான்ங்க....”

எனக்கு முன்வைத்தக் காலை பின்வைத்துப் பழக்கமில்லை... துணிந்து நின்றேன்.... அவர்கள் தடுக்க.... செல்வம் செங்கலை வைக்க ... போராட்டம் உச்சக்கட்டத்திற்குப் போய்.... H1 காவல் நிலையத்திலிருந்து இரண்டு காவலர்கள் வந்தனர்.... அவர்கள் மக்களிடம் பேசினர்.... வாங்கிக் கட்டிக்கொண்டு நடையை கட்டினர்.... குடிசைமாற்றுவாரிய J.E வந்தார்.... பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் அளவு எல்லையை காட்டினேன்..... எதுவும் பேசாமல்.... அவரும் போய்விட்டார்..... ஆனால் எனக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால்..... அவருக்கும் ஏகபோக வார்த்தை அபிஷேகம் நடந்தேறியது.....

மக்கள் திரள் அங்கேயே நின்றது..... வேறுவழியின்றி ......என் பள்ளியின் பழைய மாணவர்கள் சிலரை அழைத்தேன்...முகமது மன்சூர் , இராஜ் குமார் ,தமீம் இன்னும் பலர் அவரவர்களின் தோழமை பட்டாளத்துடன் வந்து இறங்கினர்..... எனக்கு தைரியம் பன்மடங்காய் அதிகரித்தது....

அத்தனை கூட்டத்தையும் எதிர்த்து வெற்றிகரமாக தடுப்பு சுவர் எழுப்பி பெரிய இரும்பு கேட் போட்டு முடித்தேன்.... ஏதோ இமயத்தின் உச்சியில் ஏறி நம் தேசியக்கொடி ஏற்றியதுபோல் ஒரு வெற்றிக் களிப்பு.....
பள்ளியின் முன்னேற்றத்திற்கு நான் வைத்த ஒவ்வொரு அடியும் .... பல போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் மிரட்டல்களையும் சந்தித்தே நடந்தேறியுள்ளது..... கடந்துவந்தப் பாதை கரடுமுரடானாலும்..... மனம் சோர்வுரும்போது ....எங்கிருந்தோ தொலைபேசியில் வரும் “ என்ன டீச்சர்? எப்டி இருக்கிங்க? என்ற அன்புக் குரல் ... அத்தனை சோர்வையும் போக்கி....ஆயிரம் மலர்களின் மலர்ச்சியில் இதயம் துளிர்த்திடும்!

எழுதியவர் : வை.அமுதா (30-Jun-20, 10:19 am)
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே