கனலேறி வந்தது

சிவபிரான் இடபாருடராகப் பவனி வந்து கொண்டிருக்கின்றார். அந்தக் காட்சியிலே தம் உள்ளம் களிகொள்ளக் கவிஞர் இப்படிப் போற்றுகின்றார்.

கட்டளைக் கலித்துறை

கரியொன்று பொன்மிகும் பையேறக் கற்றவர் சூழ்ந்துதொழ
எரியொன்று செல்வன் றுலாத்தினில் ஏற விருண்டமஞ்சு
சொரிகின்ற நாகமின் சோற்றினி லேறித் தொடர்ந்துவர
நரியொன்று சொந்தக் கனலேறி வந்தது நங்களத்தே. 139

- கவி காளமேகம்

பொருளுரை:

'யானைமுகனாகிய பெருமான் பெருச்சாளி வாகனத்தே ஏறியவனாக உடன் வந்து கொண்டிருக்கவும், கற்றவரான சான்றோர் சூழ்ந்து தொழுது கொண்டே வரவும்,

தீ நிறமான செந்நிறத்தைக் கொண்ட செல்வனாகிய முருகப் பெருமான் துலாமுழுக்குக் கட்டமாகிய மாயூரம் என்னும் மயிலின் மேலாக ஏறிவந்து கொண்டிருக்கவும்,

கருமையான மழை மேகங்கள் மழை சொரிகின்ற இமயத்தின் திருமகளான உமையம்மை அன்ன வாகனத்திலே ஏறிப் பின் தொடர்ந்து வரவும்,

சம்புவாகிய ஒரு தனிக்கடவுள் தமக்குச் சொந்தமான நந்தியின் மேலே ஏறியவராக நம்முடைய இடத்திலேயே வந்தருளு கின்றனரே! என்னே இதன் கண்கொள்ளாக் காட்சி!

மிகும்பை - பெருச்சாளி,. நாகம் - மலை, இமயம், சோறு - அன்னம், சொந்தக் கனல் - நம் தீ = நந்தீ என்று கொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jun-20, 10:43 am)
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே