9 அவளுடன் பேசும்போது

__________________

எழுத்திலோ வாழ்க்கையிலோ உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் மிகவும் ஆதர்சமானவர் யார் என்று வாட்ஸப்பில் அவள் கேட்டிருந்தாள்.

உனக்கு யாரைப் பிடிக்கும் என்று யோசித்து வை. அதேபோல் எந்த வித காரணங்களும் இன்றி யாரைப்பிடிக்கும் என்றும் யோசித்துக்கொள் என்ற பதிலை நானும் அனுப்பி வைத்தேன்.

அவள் கேள்விகள் எனக்குள் எப்போதும் உண்டு. நான் கொண்டாடிய தேசத்தலைவர்கள் (அரசியல்வாதி அல்ல) எழுத்தாளர் விஞ்ஞானிகள் தத்துவவாதிகள் ஆன்மீகவாதிகள் புரட்சியாளர் கல்வியலாளர் எவரும் ஒரு வயதுக்கு மேல் அல்லது சில நாட்களுக்கு அப்பாலும் அப்படியே என்னை பாதித்த ஒருவராக தொடர்ந்து இருப்பதில்லை.

அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் கலைந்து சென்று விடுகின்றனர். அல்லது நம்மை கலைத்து போய் விடுகின்றனர்.

வீடு வந்து செல்லும் உறவுகளில் ஆதர்சம் தேடும் அப்பாவியாய் கூட சில சமயம் இருந்து பார்த்ததுண்டு. மன மாறுதலுக்கு.

ஆனால் அது விழிப்பில் காணப்பட்ட கொடுங்கனவாய் மட்டுமே மாறியது.

ஒருநாள் நான் பார்த்து மிகவும் பிரமித்த அந்த ஒப்பிடமுடியாத அழகிய பெண்தான் தன் கணவனுடன் தெருவில் கைகலந்து விரட்டி விரட்டி ஓடிய காட்சியை பார்த்து நெடுநாள் உறக்கம் இன்றி போனது.

நதிக்கு அப்பால் அந்த நபர் இருக்கிறார். நதியில் முதலைகள் உண்டு. அவர் சொல்லும் சிற்சில வாக்கியங்கள் எப்படியோ என் காதில் விழுகின்றன. ஆனால் அவரை அடைய முடியாது நதியோ ஆக்ரோஷமாக போகிறது.

அவரின் பாவனைகளை பார்த்தபடி அவரை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். நதியின் நீர்த்திவலைகள் முகத்தில் தெறிக்கின்றன. எதிர்பாராது ஒரு கணத்தில் அவர் மறைகிறார்.

நதிக்கு அப்பால் இருந்த ஒருவர் மற்றும் அவரின் வாழ்க்கை குறியீடு ஒன்று ஒரு நொடியில் வெறுமையாய் மாறுகிறது. நான் இன்னும் நதியை கடக்கவில்லை.

என்னால் அப்போதும் என் நதியை கடக்க முடியவில்லை. அவரோ ஒருநாள் கடந்து மறைந்தும் போய்விட்டார்.

என் ஆதர்சத்தின் ஒரு புள்ளி கண் எதிரில் நிமிடங்களில் கரைந்தே போனது. வெட்கம் மேலிட உதடும் மனமும் துடிக்க அதன் பின்னர் என் வாழ்க்கையை நானே ஏந்தி செல்ல வேண்டியிருந்தது.

"வேறு காலங்களில் என் நெருங்கிய சொந்த உறவுகள் நட்புகள் இவற்றின் குணத்தின் சாயல் தெரிந்துதான் அங்கு எந்த ஆதர்சங்களும் எடுத்துக்கொள்ள முடியாது போகிறதோ"... என்றெல்லாம் சிறுப்பிள்ளைத்தனமாய் எனக்குள்ளாக யோசித்து கொண்டே இருந்தேன்.

அவளிடம் அப்போது ஒரு வாட்ஸப் தகவல் வந்தது.

"ஸ்பரி... நீங்கள் சொன்னது போலவும் சொல்லாதது போலவும் யோசித்து பார்த்தேன். என் ஆளுமைக்கு நிகராகவும் எதிராகவும் உள்ள பெரும் ஆளுமைகளை சேகரித்து கொண்டுதான் யோசித்தேன்.

அனைத்திலும் ஒரு புலப்படாத உரிமம் பொதிந்து இருப்பது தெரிகிறது. இந்த விஷயத்தில் இனி உங்கள் உதவி இப்போது எனக்கு வேண்டாம். நீங்களும் எனக்கு ஆதர்சமாக இருக்க முடியாது".

செய்தியை வாசித்தபின் அவளை நினைத்து பெருமையாக இருந்தது எனக்கு.



🌺🌺🌺🌺
================

எழுதியவர் : ஸ்பரிசன் (30-Jun-20, 11:42 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே