குமரேச சதகம் – கற்புடைய மாது நிறைதவறி நடவாள் - பாடல் 66
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கனபாரம் ஏறினும் பிளந்திடுவ தன்றியே
கற்றூண் வளைந்திடாது
கருதலர்க ளால்உடைந் தாலும்உயிர் அளவிலே
கனசூரன் அமரில்முறியான்
தினமுமோர் இடுக்கண்வந் துற்றாலும் வேங்கைதோல்
சீவனள வில்கொடாது
திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும்
செப்பும்முறை தவறிடார்கள்
வனமேறு கவரிமான் உயிர்போகும் அளவும்தன்
மயிரின்ஒன் றும்கொடாது
வாராத ஆபத்து வருகினும் கற்புடைய
மாதுநிறை தவறிநடவாள்
மனதார உனதடைக் கலமென்ற கீரற்கு
வன்சிறை தவிர்த்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 66
- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
தன்மனம் பொருந்தும்படி ‘உனக்கு அடைக்கலம் நான்' என்று கூறிய நக்கீரருக்கு உண்டாகிய கொடிய
சிறைவாசத்தைப் போக்கியருளிய முருகனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!
அதிக சுமை ஏறினாலும் பிளப்பது அல்லாமல் கல்தூண் வளையாது; பகைவர்களால் தோல்வியடைய நேர்ந்தாலும் அதிக வீரம் பொருந்திய ஒருவன் உயிர்விடும் வரையில் போரில் பின்னடைய மாட்டான்;
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துன்பம் வந்து அடைந்தாலும் புலியானது தன்தோலை உயிர்விடும் வரையில் கொடாது; உறுதி வாய்ந்த பெரியோர்கள் உடல் அழிவதானாலும் சொல்லுகின்ற முறையில் தவறி நடவார்கள்;
காட்டில் உலவுகின்ற கவரிமான் ஆனது உயிர் போகின்ற அளவிலும் தன் மயிரில் ஒன்றையும் இழவாது; வரக் கூடாத துன்பம் வந்த போதிலும் கற்புடைய பெண் கற்புநெறியிலிருந்து தவறி நடக்க மாட்டாள்.
அருஞ்சொற்கள்:
கருதலர்கள் - பகைவர்கள், இடுக்கண் - துன்பம், நிறை - கற்பு.