கருவைப் பிரான்

திருக்கருவை நல்லூரில், களாமரத்தினடியில் கோயில் கொண்டிருக்கும் பெருமானைப் போற்றுகிறார் கவிஞர். களாமரம் என்பது களவு என்றும் சொல்லப்படுவதாகும் இது, களவாடுதல் என்ற பொருளையும் தரும். இப்படி அமைந்த இருபொருளமைதியை வைத்துப் பாடுகிறார் கவி காளமேகம்.

நேரிசை வெண்பா

வெண்ணெய் திருடியுண்ட வேணியர னாரிருக்கக்
கண்ணன்மேல் வைத்த களவேது - பெண்ணைத்
தலையிற் சுமந்தான்மால் சர்ப்பத்தி லேறி
அலையிற் றுயின்றான் அரன். 142

- கவி காளமேகம்

பொருளுரை:

வெண்ணெயைத் திருடித் தின்ற கண்ணபெருமான் இருக்கவும், சண்டயணிந்த சிவபெருமானின் மேல் வைத்த களவு எதன் பொருட்டாகவோ? அரன் கங்கையாகிய ஒரு பெண்ணைத் தான் தன் தலையிற் சுமந்தானே அல்லாமல் களவினைச் சுமக்க வில்லையே?

ஆனால், திருமாலோ களவின் விளைவுக்கு அஞ்சிப் பாம்பின்மேல் ஏறிக்கொண்டு கடலிடத்தே சென்றல்லவோ உறங்கலாயினான்?

'மொழி மாற்று' என்னும் பாவகை இது. சிவனுக்குச் சொல்வதை மாலுக்கும், மாலுக்குச் சொலவதைச் சிவனுக்குமாக மாற்றியமைத்துப் பொருள்கொள்ளல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jul-20, 7:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே