ஆண்டானும் தாதனும்

சீரங்கத்து வைணவரும், திருவானைக்காக் கோயிற் சைவர்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். சிவனடியார்களை ஆண்டான்', அதாவது பெருமானால் ஆட்கொள்ளப் பட்டவன் என்றும், திருமாலடியார்களைத் “தாதர்கள்’ எனவும் சொல்வார்கள். தாதன் - அடியவன். இந்தச் சொற்கள் ஆண்டான் அடிமை எனவும் வேற்றுப் பொருள் தருவன. அதனைக் குறித்து ஆண்டான் அடியவன் என்றால் அடிக்கடி சண்டை நிகழாதிருக்குமோ!' எனக் கேட்பது போலச் சீரங்கத்தாரைத் தாதர்கள் எனப் பழிக்கிறார் கவி காளமேகம்.

நேரிசை வெண்பா

சீரங்கத் தாரும் திருவானைக் காவாரும்
போரங்க மாகப் பொருவதேன் - ஓரங்கள்
வேண்டா மிதென்ன விபரந் தெரியாதோ
ஆண்டானும் தாதனுமா னால். 143

- கவி காளமேகம்

பொருளுரை:

"சீரங்கத்து வைணவரும் திருவானைக்காச் சைவர்களும் போர்க்களத்தே போல வாதிட்டுத் தொடர்ந்து தமக்குள் சண்டை செய்வது ஏனோ? இவ்வாறு கேட்டபின் பட்சபாதமான எதுவும் சொல்லுதல் வேண்டாம். இது என்ன ஓர் அதிசயமோ? இதன் விபரமும் நமக்குத் தெரியாதோ? ஆண்டானும் தாதனும் என்ற நிலையினர் அவர்களானால் அவர்கள் சண்டையிட மாட்டார்களோ?

ஆண்டான் - இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற சிவனடியான்!

தாதன் - திருமால் அடியவன்,

இதனால் சிவனடியார்க்குத் தாதர்கள் அடியவர்கள் என்பதும் கூறினர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jul-20, 10:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே