குமரேச சதகம் – நட்புநிலை - பாடல் 68

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கதிரவன் உதிப்பதெங் கேநளினம் எங்கே
களித்துளம் மலர்ந்ததென்ன
கார்மேகம் எங்கே பசுந்தோகை எங்கே
கருத்தில்நட் பானதென்ன

மதியமெங் கேபெருங் குமுதமெங் கேமுகம்
மலர்ந்துமகிழ் கொண்டதென்ன
வல்லிரவு விடிவதெங் கேகோழி எங்கே
மகிழ்ந்துகூ விடுதலென்ன

நிதியரசர் எங்கே யிருந்தாலும் அவர்களொடு
நேசமொன் றாயிருக்கும்
நீதிமிகு நல்லோர்கள் எங்கிருந் தாலுமவர்
நிறைபட்சம் மறவார்கள்காண்

மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ
மருவுசோ ணாட்டதிபனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 68

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மதிலும் கோபுரமும் பொய்கையும் சூழ்ந்திருக்கும் சோழநாட்டுத் தலைவனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

ஞாயிறு காணப்படும் இடம் எங்கே? தாமரை யிருக்குமிடம் எங்கே? மனமகிழ்ச்சியுடன் தாமரை ஏன் மலர்கிறது? கரியமுகில் எங்கே உள்ளது? பச்சை மயில் எங்குள்ளது? மனமுவந்து நட்புக் கொண்டது ஏன்?,

திங்கள் எங்கே உள்ளது? பெரிய அல்லி எங்கே உள்ளது? முகமலர்ச்சியுடனே இன்பமடைவது ஏன்? கொடிய இராப்பொழுது நீங்குவது எப்படி? சேவற் கோழியின் நிலைமை எப்படி? சேவற்கோழி விடிவறிந்து எங்ஙனம் கூவுகிறது?,

செல்வம் மிக்க அரசர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களுடைய நட்பு மாறாமலே யிருக்கும்; நெறியறிந்த நல்லோர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களுக்குள் நிறைந்த அன்பை மறந்துவிடமாட்டார்கள்.

அருஞ்சொற்கள்:

வாவி - குளம், சோணாடு : மரூஉ, நளினம் - தாமரை, மதியம் - திங்கள், குமுதம் - அல்லி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jul-20, 10:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே