கண்ணஞ்சல் ஹைக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் மல்லிகை தாசன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

கண்ணஞ்சல்
(ஹைக்கூ கவிதைகள்)


நூல் ஆசிரியர் : கவிஞர் மல்லிகை தாசன்



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,
சென்னை-600 018.

பக்கங்கள் : 80, விலை : ரூ.50

******

நூலாசிரியரின் இயற்பெயர் தி. பழனிசாமி. புனைப் ப்பெயர் மல்லிகை தாசன். மூன்றாவது ஹைக்கூ நூல் இது. கவிஞர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். கவிஞர் கார்முகிலோன் பொன்மன வாழ்த்துரை வழங்கி உள்ளார். பதிப்பாளர் கவிஞர் வசீகரன் பதிப்புரை எழுதி உள்ளார். பொருத்தமான புகைப்படங்களுடன் நேர்த்தியாகப் பதிப்பித்து உள்ளார். பாராட்டுகள்.

பெண் பஞ்சாயத்து தலைவரின்
கணவர் சொற்படி நடக்கிறது
பஞ்சாயத்து!

பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33% (முப்பத்திமூன்று சதவீதம்) சட்டமாக வேண்டும். அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டுமென்று ஒரு பக்கம் போராடி வருகிறோம். மறுபக்கம் பெண்கள் தொகுதி என்று ஆகிவிட்டால் முன்னாள் பஞ்சாயத்து தலைவரே மனைவியை பஞ்சாயத்து தலைவர்(வி)யாக்கிவிட்டு இவரே ஆதிக்கம் செலுத்தும் நிலையில் சில தொகுதிகள் இருப்பதும் உண்மை தான். அதனை ஹைக்கூவாக வடித்துள்ளார்.

கோப்புக்களை வேகமாக
நகர்த்தும் சக்கரம்
லஞ்சம்!

உண்மை தான். கையூட்டு வழங்கினால் வேகமாக வேலை முடியும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைத்து விட்டனர். கையூட்டு வாங்காமலே வேலையை விரைவாக முடிக்கும் எண்ணம் அரசுப்பணியாளர்களுக்கு வர வேண்டும்.

அரசுப்பணியில் சம்பாதித்து
கப்பம் கட்டுகிறார்கள்
தனியார் பள்ளிக்கு!

உண்மை தான். பல அரசுப்பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்திட முன்வராமல் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு, அல்லல்பட்டு வருகின்றனர். அந்த உண்மையையும் ஹைக்கூவில் உணர்த்தி உள்ளார்.

சுவையாக இருக்கும்போதே
நிறுத்தி விடு
பேச்சும் உணவும்!

ஒலிவாங்கி, ஒலிபெருக்கி கிடைத்து விட்டால் போதும், போதும் நிறுத்துங்க, என்று சொல்லும் அளவிற்கு சலிக்க சலிக்க பேசிடும் பேச்சாளர்கள் உண்டு, அரசியல்வாதிகளும் உண்டு. சுருக்கமாகப் பேசுவதே சிறப்பு. உணவு உள்ளது என்பதற்காக வயிறு முட்ட உண்பதும் தவறு. இரண்டையும் ஹைக்கூ மூலம் நன்கு உணர்த்தி உள்ளார்.

எந்த இடத்திற்கு மாற்றினாலும்
வியாபாரம் குறைவதே இல்லை.
சரக்குக் கடை!

சரக்குக்கடை என்று மதுக்கடையைத் தான் குறிப்பிட்டுள்ளார். கொரோனா காலத்திலும் சமூக இடைவெளியின்றி முகக்கவசம் இன்றி போட்டிப் போட்டு மது வாங்கிக் குடிக்கும் குடி அடிமைகள் தமிழகத்தில் பல்கி பெருகி விட்டனர். மலர் தேடி வண்டுகள் வருவதைப் போல மதுக்கடை எங்கிருந்தாலும் குடிமகன்கள் தேடி ஓடி நாடி வந்துவிடும் கொடுமையை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.

அஸ்தியைக் கரைத்தனர்
குஸ்தி ஆரம்பமானது
சகோதரர்கள்!

பல குடும்பங்களில் பெற்றோர் இறந்தவுடன் சொத்துக்காக சொந்த சகோதரர்கள் சண்டையிட்டு பேச்சுவார்த்தையின்றி தனித்து இருக்கும் நிகழ்வுகளை நினைவூட்டி வடித்த ஹைக்கூ நன்று.

அறியா சனங்கள் ஓட்டளித்து
அரியாசனம் ஏற்றினர்
ஒன்றும் அறியாதவர்களை!

ஒன்றும் அறியாதவர்கள் அரியாசனம் ஏறியதும் அனைத்தையும் அறிந்து விடுகிறார்கள். எது எதில் கையூட்டு வரும் என்பதில் தெளிவாகி விடுகின்றனர். அறியா சனம், அரியாசனம் சொல் விளையாட்டு நனிநன்று.

கூண்டுகள்
எப்போதும் கூடுகளாகாது
பறவைகளுக்கு!

பறவைகள் அவைகளாகக் கட்டிய கூட்டில் சுதந்திரமாக வாழும், நினைத்த நேரம் பறக்கும், நினைத்த நேரம் கூட்டிற்கு வரும். ஆனால் தங்கக் கூண்டாக இருந்தாலும் அடைபட்டே இருக்க வேண்டும். பறக்க முடியாது, சுதந்திரம் இருக்காது. பறவையை மட்டுமல்ல, சுதந்திரமற்ற மனிதனை, பெண்களைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ள முடியும்.

மின்னஞ்சலை விட
வேகமானது
கண்ணஞ்சல்!

நூலின் தலைப்பான ஹைக்கூ நன்று. இந்த ஹைக்கூ படிக்கும் முன்பு வரை மின்னஞ்சல் தான் விரைவாக்ச செல்லும் என்று நம்பி இருந்தான். அதைவிட விரைவாகச் செல்லும் கண்ணஞ்சல் என்பதை நூலாசிரியர் கவிஞர் மல்லிகைதாசன் ஹைக்கூவின் மூலம் உணர்த்தி விட்டார்.

பாரியுமில்லை மாரியுமில்லை
தவித்துக் கொண்டிருக்கிறது
முல்லைக் கொடி!

முல்லைக்கு தேர் தந்தான் பாரி என்று படித்து இருக்கிறோம். ஆனால் இன்று அந்த பாரி இல்லை. மழையும் பெய்யவில்லை. முல்லைக்கொடி வருத்தத்தில் இருப்பதாக எள்ளல்சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.

ருத்ராட்சத்தை எண்ணியவர்
கம்பி எண்ணுகிறார்
போலி சாமியார்!

சாமியார்கள் இரண்டே வகை தான். மாட்டிக்கொண்ட சாமியார், இன்னும் மாட்டாத சாமியார். முற்றும் துறந்த துறவிகள் இன்று இல்லை. கோடிகளில் புரளும் கார்பரேட் சாமியார்கள் பெருகிவிட்ட காலம் இது. சாமியார்களின் பித்தலாட்டத்தையும் ஹைக்கூவில் உணர்த்தியது சிறப்பு. நூலாசிரியர் கவிஞர் தி. பழனிசாமி என்ற மல்லிகைதாசனுக்கு பாராட்டுகள்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (2-Jul-20, 11:53 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 38

மேலே