கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

கால் முளைத்த கனவுகள் !

நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு : வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே இல்லம் முதல் தெரு,
புதிய வசந்த நகர், ஓசூர் – 635 109, பக்கங்கள் : 160, விலை : ரூ. 150


******

நூலாசிரியர் கருமலைத் தமிழாழன் அவர்கள் மிகச்சிறந்த மரபுக் கவிஞர். பல்வேறு பரிசும் பாராட்டும் விருதும் பெற்றுள்ள தகைசால் கவிஞர். தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வுக்கு ஓய்வு தந்து ஓய்வின்றி மரபுக் கவிதைகளை எழுதி தமிழன்னைக்கு அணிகலங்கள் பூட்டி வருகின்றார். பல்வேறு இதழ்களில் எழுதி வருகின்றார். அவற்றைத் தொகுத்து தொடர்ந்து நூலாக்கி வருகிறார். இயங்கிக்கொண்டே இருக்கும் இனிய கவிஞருக்கு பாராட்டுக்கள்.

நூல் வெளியானவுடன் மறக்காமல் எனக்கு மதிப்புரைக்காக அனுப்பி விடுவார். அவரது மரபுக்கவிதை ரசிகன் நான். இந்த நூலில் மூன்று பகுதிகளாக கவிதைகள் உள்ளன. முதல்பகுதி தமிழ்க்கால்கள் 38 கவிதைகள் உள்ளன. தமிழ்மொழியின் மேன்மையை மரபில் மகுடம் சூட்டி உள்ளார். குமுகக் கால்கள் என்ற பகுதியில் சமுதாய அவலங்களை எடுத்தியம்பி உள்ளார். கனவுக்கால்கள் என்ற மூன்றாம் பகுதியில் பெண்ணியம் பாடி உள்ளார்.

அருந்தமிழில் பேச வைப்போம்

அருந்தமிழில் பேசுவதே குற்றமாக
அடிக்கின்றார் குழந்தைகளைப் பெற்ற வர்தாம்
பெருமையுடன் மம்மியென அழைப்ப தற்குப்
பெருந்தொகையைக் கட்டணமாகச் செலுத்துகின்றனர்

குழந்தைகள் தமிழில் பேசினால் தண்டத் தொகை வசூலிப்போம் என்று சொல்லும் ஆங்கிலப் பள்ளிகளை சும்மா விட்டு வைத்து விட்டு இருப்பது தமிழகத்தின் அவலம். செத்தப் பிணமென்ற பொருளுடையதை மம்மி என்று அழைக்க்ச் சொல்லும் மடமையும், தமிழகத்தில் அரங்கேறி வரும் அவமானத்தை கவிதை வரிகளின் மூலம் சுட்டி உள்ளார். பாராட்டுகள்.

இலக்கியங்கள் கூறும் வீரம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்க்கை தன்னை
அருமையாக வகுத்தவர்கள் தமிழர் தாமே!
அகந்தன்னை ஐந்திணையில் உலவ விட்டார்
அரும்புறத்தை எண்திணையில் முழக்க விட்டார்

தமிழ் இலக்கியங்கள் கூறும் வீரத்தை மரபுக் கவிதைகளில் வடித்து படிக்கும் வாசகர்கள் மனதில் வீரத்தை விதைத்து உள்ளார். அகநானூறு, புறநானூறு என அற்புதமான இலக்கியங்கள் கொண்ட மொழி நம் தமிழ்மொழி என்பதை நன்கு பறைசாற்றி உள்ளார்.

என் இலக்கு

செந்தமிழே ஆட்சிமொழி பள்ளி யெல்லாம்
செந்தமிழே கல்விமொழி தெருவி லெல்லாம்
செந்தமிழே பேச்சுமொழி வீட்டிலெல்லாம்
செந்தமிழே மழலை மொழி குவித்திருக்கும்
செந்தமிழின் நூல்களெல்லம் மொழி பெயர்த்தும்
செந்தமிழில் பிறமொழி நூல் ஆக்கம் சேர்த்தும்
எந்தமிழை உலகமொழி ஆக்க லொன்றே
என் இலக்கு என் ஓட்டம் முயல்வேன் செய்வேன்.

தமிழ்மொழி பன்னாட்டு மொழி. ஆனால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தான் தமிழ் இன்னும் ஆகவில்லை. ஆங்கில மொழி போல தமிழ் மொழியை உலக மொழி ஆக்குவேன், முயல்வேன், செய்வேன் என்ற தமிழ்ப்பற்று பாராட்டுகள்.

வணிகமாக விற்கின்ற கல்வி தன்னை
வாங்காமல் இளவயதில் கற்கின்றார்கள்
மணியான தமிழ்வழியைப் பள்ளி யெல்லாம்
மணக்க வைத்தே ஆங்கிலத்தைத் தூக்கெறிந்தார்
கணினிக்குள் நுழைந்திட்ட தமிழை வீட்டுள்
கடைத்தெருவில் மழலை நாவில் ஒலிக்க வைத்தார்
பணியெல்லாம் தமிழ்வழியில் படித்த வர்க்கே
பாங்காகக் கிடைப்பதற்கு சட்டம் செய்தார்.

நூலாசிரியர் கண்ட கனவு நனவாக வேண்டும். ஆனால் இன்றோ நடப்பதோ வேறாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் மட்டும் வாழ்ந்திட்ட தமிழ்வழிக்கல்வி அங்கும் மூடுவிழா நடத்தப்பட்டு ஆங்கிலவழிக் கல்வியை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆரம்பக்கல்வி தமிழில் தான் இருக்க வேண்டுமென்று சட்டம் செய்தல் வேண்டும். நாட்டில் நடைமுறைப்படுத்திட வேண்டும்.

காமத்தின் கண் பறிப்போம்

மலராத மொட்டதனின் இதழ் கிழித்து
மதுவுண்ட வண்டொன்றைப் பார்த்த துண்டோ
புலராத இரவுக்குள் புணர்தல் போன்று
புரிந்திட்டார் வன்செயலைக் கயவர் சில்லோர்
வலம் வந்து வலம் வந்தே அழகு மொட்டை
வன்புணர்வில் சீரழித்தார் துடிது டிக்க
நிலம் மீதில் எவ்வுயிரும் செய்தி டாத
நீச செயல் செய்வதெல்லாம் மனிதர் தாமே!

சிறுமியை சென்னையில் பதினேழு கயவர்கள் கெடுத்த செய்தி படித்து துடித்து வடித்த கவிதை நன்று. உள்ளத்து உணர்வுகளை கவிதைகளாக யாத்து வாசகர் மனதில் கவி உணர்வை விதைத்து உள்ளார். பாராட்டுகள்.

பச்சோந்தி

மரத்திற்கு மரம் தாவும் மந்தி போல
மனம் தாவிக் கட்சிகளை மாற்றிக் கொள்வர்
உரமின்றிக் கொள்கையின்றிப் பதவிக்காக
உருவத்தை எற்றார்போல் மாற்றிக் கொள்வர்
குரல் மாற்றிப் பேசுகின்ற வித்தைக் காரர்
குடுகுடுப்பைக் காரர்போல் வேடம் கொள்வர்
வரவுக்காகப் பச்சோந்தி போல மாறி
வருவோரின் நிறத்திரையைக் கிழிப்போம் நாமே!

அரசியலில் இன்று நடக்கும் அவலத்தை கவிதைகளில் சுட்டி உள்ளார். கொள்கை ஏதுமின்றி பணத்திற்காக பதவிக்காக வாலாட்டி வரும் போலி அரசியல்வாதிகள் மலிந்து விட்ட காலமிது. அரசியலில் நேர்மை, உண்மை வழக்கொழிந்து விட்டது. ஏமாற்று அரசியலே இன்று நாட்டு நடப்பாக உள்ளது என்பதை உள்ளக்குமுறலுடன் கவிதைகளில் உணர்த்தி உள்ளார்.

உண்மை வழியே உயர்வளிக்கும்

அறுசுவைக்கு நாவடிமை ஆகி விட்டால்
அதிக எடை உடல்சேர நோயோ கூடும்
உறுப்புகள் இயங்காமல் முடங்கிப் போக
உயிர்க்காற்றும் அதனாலே வருதல் போன்று
மறுப்பின்றி உள்ளத்தின் வழி நடந்தால்
மாப்பழி தான் நமக்குவரும் உலகம் ஏசும்
உறுதியுடன் நடப்பதற்கே உள்ள மங்கே
உதவாது ஆசையாலே அழிந்து போவோம்!

அளவோடு உண்டால் வளமோடு வாழலாம். நோயின்றி வாழலாம். உண்மை வழியே உயர்வளிக்கும் என்று அறநெறி கருத்துக்களை மரபுக்கவிதைகளாக வடித்துள்ளார்.

கால் முளைத்த கனவுகள் என்ற நூலின் மூலம் மரபுக்கவிதை விருந்து வைத்துள்ள பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்களுக்கு பாராட்டுகள்

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (2-Jul-20, 1:11 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 29

மேலே