பிறவாத ஆம்பல்

'திருவலஞ்சுழி என்னும் திருவூரிலேயுள்ள விநாயகப் பெருமானைக் குறித்துக் கவிராயர் சொல்லிய சுவையான செய்யுள் இது.

கட்டளைக் கலித்துறை

பறவாத தும்பி கருகாத வெங்கரி பண்புரண்டே
இறுகாத தந்தி உருகாத மாதங்க மிந்துதுதல்
நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடுசுனையில்
பிறவாத வாம்பல் வலஞ்சுழிக் கேவரப் பெற்றனனே! 144

- கவி காளமேகம்

பொருளுரை:

தும்பி, கரி, தந்தி, மாதங்கம், சிந்துரம், களபம், ஆம்பல் என்பனவெல்லாம் வெவ்வேறு பொருளைக் குறிப்பனவேனும், அவை யானையின், பெயருமாகும், அதனால் அவற்றைக் குறிப்பிடுவது போல யானை முகனைக் குறிப்பிட்டுப் போற்றுகின்றார்.

பறத்தலைச் செய்யாத தும்பி (வண்டு), கருகிப் போதலைச் செய்யாத வெம்மையான கரி (அடுப்புக்கரி), பண்முறை பிறழ்ந்து கட்டமையாத தந்தி (வீணையின் தந்தி),. அனலிடத்தே உருகாத மாதங்கம் (பெரிதான தங்கக் கட்டி), பிறையனைய நெற்றியிடத்தே நிறங்காட்டாத சிந்துரம் (பொட்டு), பூசுதற்குப் பயன்படாத களபம் (களபம் - சாந்து), நெடிய சுனைநீரினிடத்தே தோன்றாத ஆம்பல் (ஆம்பற்பூ) ஆகிய விநாயகப் பெருமான் திருவலஞ் சுழியினிடத்தே வந்து அருள் செய்தலைப் பெற்றேன் யான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jul-20, 7:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

சிறந்த கட்டுரைகள்

மேலே