நடுத்தர வர்க்கம்

நீங்கள் இவ்வாறு செய்பவரா?
டூத் பேஸ்ட் அநேகமாக தீர்ந்த நிலையில் இருக்கும்போது அந்த ட்யூபை அமுக்கோ அமுக்கு என்று உங்கள் முழு பலத்தையும் போட்டு அமுக்கி அந்த ட்யூபுக்கு வாயிருந்தால் அலறும் வரை அதிலுள்ள இத்தினியூண்டு பேஸ்டை போராடி எடுத்துப் பல்விளக்கிவிட்டு அப்படியும் அந்த ட்யூபை எறிய மனமில்லாமல் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து இனிமேல் தேறவே தேறாது என்று வந்தவுடன் அரைகுறை மனதுடன் ட்யூபை தூக்கி எரிபவரா?

ஷேம்பு தீர்ந்தவுடன் அந்தப்பாட்டிலைத்தூக்கி எறிய மனமில்லாது அதில் தண்ணி கொஞ்சம் ஊற்றி அதை குலுக்கோ குலுக்கு என்று குலுக்கி அந்த நீரை தலையில் பூசிக்கொண்டு இரண்டொரு நாள் ட்ரயலுக்குப்பிறகு அதில் இருப்பது வெறும்தண்ணிதான் என்று தெரிந்த பிறகும் அந்த பாட்டிலை வேறு எதற்காவது பயன்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணி பத்திரமாக எடுத்து வைப்பவரா நீங்கள்?

ரோட்டோரக்கடையில் காய்கறி வியாபாரம் செய்பவர்களிடம் 200 அல்லது 300 ரூபாய்க்கு வியாபாரம் செஞ்சாலும் கடைசியாக கொஞ்சம் கொசுறு கேட்கும் மனிதரா நீங்கள்?

உங்களுக்கு வரும்பரிசை அதைச்சுற்றி உள்ள தகதக என்று கலர்கலராக மின்னும் பேப்பரை கூடிய மட்டும் டேமேஜ் ஆகாமல் கழற்றி அதைப் பல நாள் பாதுகாத்து, வேறு ஒரு நாள் உங்கள் நண்பனுக்கோ, நண்பிக்கோ பரிசு வழங்கும்போது அந்தப் பெட்டியின் மீது சுற்றி பேக் செய்து தருவதில் இன்பம் காணுபவரா நீங்கள்?

நீங்கள் வாங்கி வந்த பொருளை முற்றிலும் பயன்படுத்தி அப்பொருள் பயனற்ற தாகப் போன பிற்பாடும் அந்தப்பொருள் புதிதாக வாங்கின அன்று எந்த பெட்டியில் வந்ததோ அந்தப்பெட்டியை அல்லது டப்பாவை பத்திரமாக வருஷக்கணக்கில் வைத்திருப்பவரா நீங்கள்?

உங்களுக்குப் பரிசாக வந்த ரவிக்கைத்துண்டை பத்திரமாக எடுத்து வைத்து உங்கள் சான்ஸ் வரும்போது அதை உங்கள் நண்பிகளுக்குப்பரிசாகக் கொடுப்பவரா நீங்கள்?

வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்ற பொருட்களை வீதி வியபாரியிடம் வாங்கும்போது அவரிடம் அரை ரூபாய்குறைக்க அரை மணிக்குமேல் பேரம் பேசும் நீங்கள், ஸ்டைலாக மிகப்பெருமையுடன் பெரிய ஷாப்பில் நுழைந்து டிவி வாங்கும்போது அந்த ஷாப் ஓணர் சொன்ன விலையை ஏற்றுக்கொண்டு எந்தப்பேரமும் பேசாமல் செக்கைக் கிழித்தோ, அல்லது கேஷைக்கொடுத்தோ பெருமைப்படுபவரா நீங்கள்?

உங்கள் கடிகாரத்தின் அல்லது வேறு எந்தப்பொருளின் பாட்டரி சார்ஜ் தீர்ந்த பிறகும் அதைத் தூக்கி எறிய மனது வராமல் அதை வேறுவழியின்றி சோகத்துடன் தூக்கி எரிபவரா நீங்கள்?

நீங்கள் தங்கம் வாங்கப்போவதில்லை என்று தெரிந்தும் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டு போவதைக்கண்டு கவலைப்படுபவரா நீங்கள்?

மத்யான லஞ்சுக்கோ விருந்துக்கோ அழைக்கப்பட்டால், அன்று காலை பிரேக்ஃபாஸ்டையே குறைத்துக்கொண்டு அந்த லஞ்ச் சாப்பிட உங்ளைத் தயார் படுத்திக்கொள்பவரா நீங்கள்?

நீங்கள் வாங்கிய துணி பழசானதும் அதை எப்படி எல்லாம் பயன் படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்திய பிறகும் அது இனி வேறெதற்கும் உதவாது என்ற நிலையில் அதை வீடு துடைக்கப்பயன்படுத்தி, அது நாற்றம் அடிக்க ஆரம்பித்தவுடன் வேறு வழியில்லாமல் தூக்கி எரிபவரா நீங்கள்?

நீங்கள் வாங்கி வந்த காஸ்ட்லியான சைனா கப், சாஸர்களை உங்களுக்கு வேண்டிய நண்பர்கள் வரும்போதுமட்டும் உபயோகித்து மற்ற நேரத்தில் அதைப்பத்திரப்படுத்தி அதை உங்க வீட்டு ஷோ பீரோவில் பூட்டி வைப்பவரா நீங்கள்?

மலைப்பழம்சாப்பிடும்போது அதன்மேல்தோலை உரித்து அதற்கும் பழத்துக்கும் இடையே உள்ள பேசினைச் சாப்பிடுபவரா நீங்கள்?

மாம்பழம் சாப்பிடும்போது அதை சுவைத்து சாப்பிட்டு தோலில் பழம் ஒட்டி வீணாகிறது என்று அதையும் கடித்துச்சாப்பிட்டு விட்டு உங்கள் உள்ளங்கை , பின்னங்கை, விரல்கள் என்று ஒன்று விடாமல் சப்பி சப்பி மாம்பழ ஜூசை உறிஞ்சி உறிஞ்சி சாப்பிடுபவரா நீங்கள்?

ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது கப்பிலுள்ளதை சாப்பிட்டவுடன் அந்த கப்பை இப்படி அப்படி என்று ஸ்பூனால் சுரண்டோ சுரண்டு என்று சுரண்டி ஒரு சொட்டு ஐஸ்கிரீம் கூட வேஸ்ட் ஆகாதபடி செய்து, சந்தேகத்துக்கு சாம்பார் என்பது போல அந்த ஸ்பூனையையும் ஒரு அஞ்சு நிமிஷம் சுவைப்பவரா நீங்கள்?

ஓட்டலுக்குப்போய்ஆர்டர் பண்ணி நீங்கள் சாப்பிடும்போது உங்கள் பக்கத்து டேபிள்காரர் ஆர்டர் பண்ணி சாப்பிடும் பொருள் நன்றாக இருப்பதாக அதைப் பார்த்து அட டா அதையே நாமும் ஆர்டர் பண்ணி இருக்கலாமே என்று கவலைப்படுபவரா நீங்கள்?

நீங்கள்கடை வீதியில் காய்கறி வாங்கும்போது நீங்கள் வாங்கின வெண்டைக்காயை விட உங்கள் பக்கத்தில் இருப்பவர் வாங்கி அவர் பையில் வைத்து இருக்கும் வெண்டைக்காய் மிகவும் இளசாகவும் தளதளவென்று புதிதாகவும் இருப்பதாக நினைப்பவரா நீங்கள்?

உங்க குழந்தைங்க பக்கத்து வீட்டுக்குழந்தைங்களைவிட எல்லாவிதத்திலும் கெட்டிக்காரனாகவோ, கெட்டிக்காரியாகவோ இருக்கணும்னு நினைப்பவரா நீங்கள்?

குழந்தை பிறக்காத போதே, பிறக்கப்போகிற குழந்தை, இஞ்சினீயராகவோ, டாக்டராகவோ ஆக வேண்டும் என்று எண்ணுபவரா?
அல்லது ஃபாரின் போய்ப்படித்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவரா?

சம்பள உயர்வு வந்தவுடன் ஒரு வாரம் சந்தோஷப்பட்டு, அதற்கு அடுத்த வாரம் மூக்கால் அழுபவரா நீங்கள்?

உங்களுக்குத்தெரிந்தவர்கள் யாராவது முன்னுக்கு வந்தால் ‘அவனுக்கு அனியாயமாய் அதிருஷ்டம் அடிச்சிடுச்சு’ என்று மனதின் ஒரு மூலையில் பொறாமைப்படுபவரா நீங்கள்?

அப்படியானால் நீங்கள் ஒரு நடுத்தர வர்க்கத்தைச்சேர்ந்த இந்தியன். என்ன சரிதானே?

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (3-Jul-20, 2:54 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
Tanglish : naDuththara varkkam
பார்வை : 29

மேலே