குமரேச சதகம் – இடம் அறிதல் - பாடல் 70

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தரையதனில் ஓடுதேர் நீள்கடலில் ஓடுமோ
சலதிமிசை ஓடுகப்பல்
தரைமீதில் ஓடுமோ தண்ணீரில் உறுமுதலை
தன்முன்னே கரிநிற்குமோ

விரைமலர் முடிப்பரமர் வேணிஅர வினைவெல்ல
மிகுகருட னால்ஆகுமோ
வேங்கைகள் இருக்கின்ற காடுதனில் அஞ்சாமல்
வேறொருவர் செல்லவசமோ

துரைகளைப் பெரியோரை அண்டிவாழ் வோர்தமைத்
துட்டர்பகை என்னசெய்யும்
துணைகண்டு சேரிடம் அறிந்துசேர் என்றௌவை
சொன்னகதை பொய்யல்லவே?

வரைஊதும் மாயனை அடுத்தலாற் பஞ்சவர்கள்
வன்போர் செயித்ததன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 70

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

நிலத்தில் ஓடும் தேர் நீண்ட கடலில் ஓடுமோ? கடலில் ஓடும் கப்பல் நிலத்தின்மேல் ஓடுமோ? நீரில் வசிக்கும் முதலைக்கெதிராக (நிலத்தில் வசிக்கும்) யானை நிற்குமோ?

மணமிக்க மலரணிந்த சிவனார் திருமுடியிலுள்ள பாம்பினை வெல்ல வலிமைமிக்க கருடனால் இயலுமோ? வேங்கைகள் வசிக்கும் காட்டிலே எவரேனும் அச்சமின்றிச் செல்லமுடியுமோ?

தலைவர்களையும் பெரியோர்களையும் அடைந்து வாழ்கின்றவர்களைக் கொடியவர் பகைமை என்ன செய்துவிடும்? நல்ல துணையைக் கண்டு பிடித்துச் சேரத்தக்க இடம் அறிந்து நட்புக்கொள் என்று ஒளவை கூறிய கதை பொய்யா?

மூங்கிற் குழலை ஊதும் கண்ணபிரானைச் சார்ந்ததால் அல்லவோ பாண்டவர்கள் தங்களுடைய கொடிய போரை வென்றனர்?,

அருஞ்சொற்கள்:

சலதி - கடல், கரி - யானை, விரை - மணம், வேணி - சடை, வரை - மூங்கில், மூங்கிலாற் செய்த குழல் வேய்ங்குழல் எனப்படும்.

கருத்து:

அவரவர்க்கு ஏற்ற இடத்திலிருப்பதே நல்லது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jul-20, 8:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே