ஆறுமுகன் பெருமை

ஒரு முருகன் தலத்திலே, பெருமான் பவனி வருகின்றான். அந்த ஆடம்பரத்தைக் கண்டார் காளமேகம். அப்பன் பிச்சை எடுத்துச் சீவிக்கிறவன்; ஆத்தாள் மலை நீலி; மாமன் உரியிலே வெண்ணை திருடி உண்டவன்; அண்ணன் சப்பைக் காலன்; பெருவயிறன், குடும்ப நிலைமை இப்படிப்பட்ட அருமையுடன் இருக்கிறது இவனுக்கு" என்று நிந்திப்பது போலப் போற்றுகிறார் கவிஞர்.

'முருகன் பெருமையைப் பாடுக” என்று கேட்கப் பாடியதாகவும் சொல்லலாம்.

நேரிசை வெண்பா

அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி - சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்(கு)
எண்ணும் பெருமை இவை. 145

- கவி காளமேகம்

பொருளுரை:

ஆறுமுகத்தினனான முருகனுக்கு இவ்விடத்தே நாம் கருதக் கூடிய பெருமைகள் யாவை எனில், பெற்ற தகப்பனான சிவபெருமானோ பிச்சை ஏற்று உண்ணும் இயல்பினன், பெற்ற தாயோ மலையிடத்துப் பிறந்த கொடுமைக்காரி (நீலவண்ணம் உடையவள்.) ஒப்பிடுவதற்கும் அரியவனான தாய் மாமனோ உறியிலே வெண்ணெய் திருடுபவன்; சப்பைக் காலனான இவன் அண்ணனோ (மகோதரம் என்னும் பெரியவயிறாகத் தோன்றும் நோயினை உடையவன்) பெரிய வயிற்றினை உடையவன் எனும் இவைதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jul-20, 9:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே