வேணாம் வேணாம் வேணவே வேணாம்6 IAS OFFICER

ஊர் உலகத்துலே IAS னாலே ஒரு கெத்து இருக்கத்தான் செய்யுது.ஆனா அவங்களுக்கு எங்களோட ஒரு பக்கம்தான் தெரியுது. பல ஏழைக்குழந்தைங்க கூட IAS பாஸ் பண்ணிட்டு கலெக்டர் ஆகணும்னு பேசறதைக் கேள்விப்படறோம். சில பேர் அப்படி IAS பாஸ் பண்ணி கலெக்டர் வேலையிலே சேந்தவங்களும் உண்டு. நான்கூட முதல்லே இஞ்சினீரிங்கோ, மெடிகலோ கிடைக்குமான்னு ட்ரை பண்ணினேன் கிடைக்கல்லை. உடனே தூக்குப் போட்டுக்கிட்டு சாகாம IASக்கு ட்ரை பண்ணினேன். பாஸ் பண்ணினேன்,
IAS பாஸ் பண்ணின உடனே ரொம்ப கர்வமா இருந்தேன். எங்க சொந்தக்காரங்க சிலர் ரொம்ப சந்தோஷப் பட்டாங்க. சிலர் உள்ளுக்குள்ளே பொறாமையிலே வெந்துகிட்டு இருந்தாங்க.
முதல்லே எங்களுக்குப் பிரச்சினை சொந்தத்திலிருந்துதான் ஆரம்பமாகும். நாங்க சொந்தக்காரங்க கிட்டே ரொம்ப ஜாக்கிரதையாப் பேசணும். கொஞ்சம் careless பேசிட்டா" ஊம். அவன் IAS இல்லியா? அதான் ராங்கி பண்ணிக்கிறான்"னு வாய்கூசாம சொல்லுவாங்க. சொந்தக்காரப் பையனுக்கு வேலை வாங்கித் தரலைன்னா என் தலையைப் போட்டு உருட்டோ உருட்டுன்னு உருட்டிடு வாங்க. இப்படித்தான் சொந்தக்காரங்க, சினேகிதங்க தொல்லை தாங்க முடியாது.
பதவின்னு சொன்னா என்னத்தைச் சொல்ல? எங்களுக்கு இருக்கிற பவர் ஒரு வரைமுறைக்குள்ளே தான் இருக்கு. ஆனா பொறுப்போ ஏராளமா இருக்கு. எந்த நேரத்துலே, எந்த இடத்துலே, என்ன நடக்கும்னு தெரியாது. அரசாங்கத்தோட எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றதுலே எங்களுக்கு நிறைய பொறுப்பு உண்டு. மாவட்டத்துலே எந்தப் பிரச்சினையா இருந்தாலும் எங்க தலைதான் உருளும். இதுலே ஏகப்பட்ட பாலிடிக்ஸ். உள்ளூர் ரௌடியிலே இருந்து லோக்கல் பாலிடீஷியன் வரையிலும் கேக்கற கேள்விக்கெல்லாம் நாங்க பதில் சொல்லணும். அவர்களை எல்லாம் சமாளிக்கத் தெரியணும். எங்களுக்குத் தேவையில்லாத விரோதம் வந்து சேரும். விவசாயிகள் பிரச்சினை, அடிதடி ரகளை, அரசியல் போராட்டம் எல்லாத்துக்கும் சுமுகமா பேச வேண்டியவங்களோடே பேசி நிலைமையை சமாளிக்கணும். அது அவ்வளவு ஈஸியான சமாசாரம் இல்லே.
ஊழலை எதிர்த்து நிக்கணும்னா, பல அரசியல்வாதிகளை எதிர்த்து நிக்கணும். அரசியல்வாதிகளை எதிர்த்து நிக்கணும்னா, அரசாங்கத்தை எதிர்த்து நிக்கணும், அரசாங்கத்தை எதிர்த்து நின்னா அதுக்கான விளைவுகளை நான் சந்திக்கத் தயாராகணும். இதனாலேயே பல IASஆபீசர்கள் மனமொடிஞ்சி தற்கொலை பண்ணிக்கிற அளவுக்குக கூட போறாங்க. அரசியல்வாதிகள் கொடுக்கற பிரஷரை எல்லாம் தாங்கிக்கத் தெரியணும். அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டினா, கடைசியிலே நம்பளை மாட்ட வச்சுட்டுப் போயிடுவாங்க.
அவங்க சில தவறான காரியம் செய்யச் சொல்வாங்க. அதை நாசூக்கா முடியாதுன்னு சொல்லித் தவிர்க்கத் தெரியணும். தைரியமா தவறுகளை பக்குவமா எடுத்துச் சொல்லத் தெரிஞ்சிக்கணும். அதுக்கு நாங்க படிச்ச படிப்போ, IAS ஓ உதவாது. யாரோடே டீல் பண்றோமோ அவங்களோட மனசைப் புரிஞ்சிக்கத் தெரியணும். அதை இப்ப என் கேஸையே எடுத்துக்குங்களேன். என்னோட பத்தாவது படிச்ச பரமசிவம் பத்தாம் கிளாஸ் ஃபெயில். ஆனா அவன்- அவன்னு இனிமே சொல்லமுடியுமா?- அவர் இப்ப நான் எந்த டிபாரட்மெண்ட்டிலே செக்ரடரியோ இருக்கேனோ அந்த டிபார்டுமெண்டுக்கான மந்திரி. நான் அவர் சொல்றதை எல்லாம் கேட்டுத்தான் ஆகணும். பழைய ஃப்ரெண்ட் பரமசிவம் தானேன்னு அலட்சியமா இருக்க முடியாது.
சில சமயம் சில காரியங்களை சில மந்திரிகள் எழுத்து மூலமா இல்லாம வாயால சொல்லிச் செய்யச் சொல்வாங்க. அப்படி செஞ்சு பல பேர் மாட்டிட்டு இருக்காங்க. அதனால் பதவி இழப்பு நேரலாம். ஜெயில் வாசம்கூட கிடைக்கலாம். எங்களுக்கு 24 மணி நேரமும் பிரஷர்தான். எந்த நேரத்துலே மந்திரி கூப்பிட்டாலும் உடனடியா போயாகணும். எங்களை புதுப் புதுத் துறைக்கு மாத்துவாங்க. நாங்க அதை ஏத்துக்கிட்டு அதைப் பத்திய எல்லா விஷயங்களையும் தெரிஞ்சிகிட்டாதான் எங்க கீழே வேலை செய்யறவங்க கிட்டே வேலை வாங்க முடியும்.
மந்திரிங்க சில பேர் மரியாதை இல்லாம பேசுவாங்க, மிரட்டுவாங்க. அதுக்கெல்லாம் ஈடு கொடுக்கணும். கோவப்படக்கூடாது. மந்திரிங்க தங்களுக்கு வேண்டியவங்களுக்கு காண்ட்ராக்டோ, கூடாத சலுகையையோ கொடுக்கச் சொல்லுவாங்க. அதை சட்டத்தை வளச்சி எப்படி செய்யணும்னு சொல்லுவாங்க. இதுக்கெல்லாம் ஈடு கொடுக்கத் தெரியணும். ரிடயர் ஆற வரையிலும் நிம்மதி கிடையாது. சொந்த வேலைகளையோ, குடும்பத்தையோ கவனிக்கக்கூட நேரம் கிடைக்காது. அடிக்கடி கவர்மெண்ட் மாறும்போது அல்லது மந்திரிங்க மாறும் போது நேர் எதிர்மாறா செய்ய வேண்டி வரும். அதையும் சட்ட வரம்புக்குள்ளே செய்யத் தெரியணும். மந்திரிக்கு வேண்டிய ஆபீசர்களுக்கு நல்ல துறை கிடைக்கும். அப்படி இல்லாதவங்களுக்கு பவர் எதுவும் இல்லாத துறைதான் கிடைக்கும். பொறுத்துக் கிட்டுதான் ஆகணும்.
ரொம்ப சிக்கலான வேலைங்க IAS ஆபீசர்கள் வேலை. நிம்மதிங்கறது கொஞ்சம் கூட கிடையாது. பேசாம இஞ்சினீரிங் படிச்சுட்டு அமெரிக்கா, கிமெரிக்கா போனவங்க பாடு படு நிம்மதிங்க. என் பையனை எப்படியாவது அமெரிக்காவுக்கு அனுப்பப் பார்ப்பேனே தவிர ஒருநாளும் இங்கே வேலை செய்யச் சொல்ல மாட்டேன். போதும்டா சாமி, போதும் இந்த IAS வேலை. அது என்னோட போகட்டும். வேணாம்.. வேணாம்.. வேணவே வேணாம்

எழுதியவர் : ரா.குருசுவாமி ( ராகு) (7-Jul-20, 2:44 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 18

மேலே