மாடு எடுத்துப் போவதேன்

ஆடு திருடிய கள்வன் அவன், அவனை ஒரு மாடு எடுத்துக் கொண்டு போகிறதே? இது என்ன மாயமோ? சிதம்பரத்துத் தில்லை மூவாயிரவரின் கண் முன்னேயே இப்படியும் நடக்குமோ? இது அநியாயம் அல்லவோ?’ கவிஞர் இப்படிக் கவலையோடு கேட்கின்றார்.

நேரிசை வெண்பா

ஆடெடுத்த தில்லை அனவரவத் தாண்டவனை
மாடெடுத்துப் போவதென்ன மாயமோ - நீடுமுயர்
வானத்தார் போற்றுகின்ற வண்மைச் சிதம்பரத்துத்
தானத்தார் பார்த்திருக்கத் தான். 149

- கவி காளமேகம்

பொருளுரை:

'ஆட்டினை எடுத்த அந்தத் தில்லை நகரத்து அனவரதத் தாண்டவன் என்பவனை ஒரு மாடு எடுத்துப் போவதுதான் என்ன மாயமோ? மிகவுயர்ந்த வானத்தவரும் போற்றுகின்ற வண்மையினை உடைய சிதம்பரத்துத் தானத்தார்கள் பார்த்திருக்கவும் இப்படி நடக்கிறதே? .

பெருமான் ரிஷபாரூடராகப் பவனி வருவதை இப்படிப் போற்றுகின்றார் கவி காளமேகம்.

அனவரதத் தாண்டவன் - நாள் தவறாது நடனம் செய்பவன். மாடு - நந்தீசர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jul-20, 7:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே