வண்டு முருகன்களும் வாரிய அமைச்சரும்

வண்டு முருகன்களும் வாரிய அமைச்சரும்....

அப்போதுதான் ஒரு பெரிய பிரச்சனை நீங்கி.... நிம்மதியில் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு ... பள்ளி சுத்தமான காற்றை சுவாசித்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது..... நானும் ஒருமாத கடுமையான மூச்சுத் திணறலுக்குப்பின் நிம்மதியாய் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தேன்....

( பிரச்சனை இதுதான்.....
பள்ளியின் பிரதான கட்டடத்திற்கும் சத்துணவு உண்ணும் கூடத்திற்கும் இடையே உள்ள இடத்தில்.....மொத்த குடிசைமாற்று வாரிய வீடுகளுக்கான செப்டிக் டேங்கும் அமைந்திருந்தது.... அவ்வப்போது அதை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து பாதியில் விட்டுச் செல்வர்....வகுப்பறையில் இருக்கவே முடியாது...எவ்வளவு ஃபினாயில் வாங்கி சுற்றி சுற்றி ஊற்றினாலும் நாற்றம் போகாது.... இது போதாதக் குறையாக ... எங்கள் தலையில் இடிவிழுந்தாற்போல செப்டிக் டேங்க் முழுதையும் உடைத்து அப்படியே விட்டுச் சென்று விட்டனர் புதிதாய் டிரைனேஜ் போட்டுவிட்டதால்.......
அடுக்கடுக்காய் பலமுறை மனு கொடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை .... பள்ளியில் மாணவர்களால் வகுப்பறையில் இருக்கவே முடியவில்லை... அப்படி ஒரு வாடை..... வேறுவழியின்றி அப்போது நிர்வாகியாக இருந்த என் தந்தை.... பதிமூன்று லாரி மணல் அடித்து அதை மூடி இருபுறம் செடிகளை நட்டார்... பள்ளி வளாகம் தூய்மையாய் காட்சியளித்தது... ஆனால் அடுத்தநாளே அடுத்தப் பிரச்சனை முளைத்து விஸ்வரூபம் எடுத்தது .....அப்போதைய ஆளுங்கட்சியை சேர்ந்த சில வண்டு முருகன்கள்... அந்த இடைவெளியில் .... கட்சிக் கொடியை நட்டு சிறு கொட்டகை போட்டனர் ....இது பள்ளி நடைபெற இடையூறாய் இருக்கும் என்று நிர்வாகம் எவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காமல்... தங்கள் பணியை தொடர்ந்தனர் ... வேறுவழியின்றி அவர்கள்மீது வழக்கு தொடுத்து.... இடைக்காலத்தடை பெற்று... அந்தக் கொட்டகையை நீக்கினோம்)

இடி இடித்து ஓய்ந்தது போல் அன்று தான் .... நல்லதொரு அமைதியான சூழலில் Wordsworth எழுதிய The Daffodils போயட்ரி நடத்தி முடித்தேன்.... பள்ளியின் உணவு இடைவேளைக்கு மணியடித்தது..... மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம் சொல்லி... எப்போதும்போல சில எச்சரிக்கைகளும் கொடுத்து அனுப்பிவிட்டு... எதிரில் இருந்த என் அலுவலறைக்குச் சென்று .... காலை சிற்றுண்டி உண்ணாததால் கடுமையான பசியில்....ஆவலாய் அம்மா கொடுத்தனுப்பிய மதிய உணவை உண்ணத் தொடங்கினேன்.... சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் ஆவிபறக்க தட்டில் உணவை ஏந்திவந்து வரிசையாய் வகுப்பறையில் அமர்ந்து உண்ணத் தொடங்கினர்... பெற்றோர்கள் சிலர் சத்துணவை வாங்கிக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தனர்... ஆயிரம் மாணவர்களுக்கு மேல் இருந்ததால் .... மதிய உணவு நேரத்தில் பள்ளி கல்யாணவீடுபோல் காட்சியளிக்கும்.... 23 ஆசிரியர்களும் சிறு சிறு குழுக்களாக அமர்ந்து க வகுப்பறைகளில் உணவு உண்ணத் தொடங்கினர்.... திடீரென்று ஒரே வேட்டு சத்தம்.... மக்கள் திரலாய் நின்று பேசும் இரைச்சல்.... அது அப்பகுதியில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள் தான்.... அதனால் அதை பெரிதாய் நினைக்காமல் ... உண்ணுவதில் கண்ணும் கருத்துமாய் இருந்தேன்.....

திடீரென சத்தம் வெகு அருகாமையில் வருவதை உணர்ந்து தலையை நிமிர்த்தினேன்... அலுவலறை வாசலடைக்க கிட்டத்தட்ட இருபத்தைந்து பேர் வெள்ளையும் சொள்ளையுமாய் கட்சிக் கரைவேட்டியும் சட்டைப்பையில் புரட்சித்தலைவி அவர்கள் படத்துடனும் நின்றிருந்தனர்..... அதில் சிலரது முகம் எனக்கு பரிச்சயமான முகங்கள் .... அந்தப் பகுதி வட்டச் செயலாளர்கள் வண்டு முருகன்கள் ...சில கட்சியை வைத்து ஏய்த்துப் பிழைக்கும் சில்லறைகள்... (1991’ல் அப்போதுதான் முதன்முறையாக புரட்சித் தலைவி ஆட்சியில் அமர்ந்த நேரம்) அந்த சில்லறைகளுக்கு நடுநாயகமாக சற்று மிடுக்காய் ஒருவர் நின்றார்..... (இவர் ஏதோ பெரிய வட்டம் என்று நினைத்தேன்)
வந்தக் கூட்டத்தை பார்த்து காரணம் ஏதும் அறியாமல் நான் திகைக்க....கூட்டத்தில் ஒருவன் மட்டும் கெத்தாய் என்னை வரும்படி சைகை செய்தான்..... அப்படியே எச்சில் கையை ஏந்திய வண்ணம் அலுவலறை வாசலை அடைத்தது போல் நின்று.... (ஏதோ இது மிரட்ட வந்தக் கூட்டம் ... அதனால் முதலில் நாம் முந்திக் கொள்ளவேண்டும் என்று மனம் சொல்ல)
சற்று குரலை உயர்த்தி....
யார் நீங்க...?
எதுக்கு இப்டி ஸ்கூல்குள்ள கும்மலா வந்திங்க...?
என்று நான் கேட்கும்போதே...அந்த நடுநாயகர் முகத்தை சற்று விரைப்பாய் வைத்து ... பள்ளியில் சுவரில் நான் மாட்டியிருந்த போட்டோவை பார்த்து...
இவர் யாரு ?
எதுக்கு இத இங்க மாட்டி வச்சிருக்கிங்க? என்று கடுடுப்பாய் கேட்டார்...
(அது என் பெரியப்பா ஆலடி அருணா அவர்களது படம்.. பெரியப்பா தோரணையாய் மைக்கில் பேசுவதுபோல் இருக்கும் எனக்கு மிகவும் பிடித்தப் படம்)
அதைப்பற்றிக் கேட்க இவருக்கு என்ன உரிமையென்று எனக்கு கோபம்வர.....
சற்று அழுத்தமாய், ஆனால் நிதானமாகச் சொன்னேன்...
“இது எங்க பெரியப்பா ஆலடி அருணாவோட படம்...
எங்க குடும்பத்திற்கு பெரியவர் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்...அதனால மாட்டி வச்சிருக்கோம் “
வந்தவர் உடனே....
“இதெல்லா இங்க மாட்டக் கூடாது:....
செத்தவங்க படத்ததா ஸ்கூல்ல மாட்டனும்... “ மிரட்டும் குரலில் சொன்னார்.....
எனக்கோ கோபம் உச்சம் தலைக்கு ஏறியது....இருந்தும் ஏனோ என் நாவு அன்று அடக்கம் காத்தது....ஆனால் வந்தக் கூட்டத்தையும் அந்த நடுநாயகரையும் விசித்திரமாய் பார்த்தேன்....
வந்தவர் பள்ளியை ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு....
புரட்சித் தலைவி படத்தை எதுக்கு மாட்டல...? என்று வினவ...
“ குடுங்க மாட்டிக்றேன்” என்று சிரித்தபடி சொன்னேன்... என்னை மீண்டும் கோபமாய் அவர் முறைத்துப் பார்த்துவிட்டு.... கூட்டி வந்த வண்டு முருகன்கள் புடைசூழ பள்ளியின் இருபுறமும் பார்வையை வீசியபடி அடுத்த நுழைவாயில் வழியே கடந்து சென்றார்.... நான் அவர்கள் வாசலை கடக்கும் வரை நின்று பார்த்துவிட்டு ... மீண்டும் சென்று உண்பதை தொடர்ந்தேன்...

பள்ளியின் மூத்த ஆசியர் ஒருவர் வேகமாக உள்ளே வந்தார்....
“அமுதா! வந்தது யாருனு தெரியுமா..? ”பீடிகையோடு கேட்டார்..
எனக்கு எப்டி டீச்சர் தெரியும்?
எவ்ளோ தைரியம் அவனுக்கு... எங்க பெரியப்பா படத்த மாட்டக்கூடாதுனு சொலறதுக்கு இவன் யாரு?
செத்தவங்க படத்த தான் மாட்டனுமாம்... அப்புறம் எதுக்கு புரட்சிதலைவி படத்த ஏன் மாட்டலனு கேக்றான்... சரியான கிறுக்கன் போல”என்று கோபத்தில் கொட்டித் தீர்த்தேன்...

“அமுதா! வந்தவர் நம்ம ஊராட்சித்துறை அமைச்சர் செல்வ கணபதி” என்று அச்சத்தோடு சொல்ல... நானோ கலுக்கென்று சிரித்துவிட்டேன்....
“அடப்பாவிகளா! வந்தவன்ங்க ஒருத்தனாவது சொல்லியிருக்கலாம்ல.... ஒரு சால்வை போத்தி மரியாதை பண்ணி அனுப்பியிருக்கலாம்..சரி விடுங்க டீச்சர்... நம்ம மேல எந்தத் தப்பும் இல்ல” என்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டேன்....

எங்கள் பள்ளியின் மீது திமுக சாயம் பூச்சப்பட்டதால்... அந்தப் பகுதிக்கு பார்வையிட வந்த அமைச்சரை ...லோக்கல் கட்சிக்காரர்கள் உசுப்பேத்தி பள்ளிக்கு அழைத்து வந்துள்ளனர்... அவரும் வந்ததற்கு கெத்துக் காட்டி சென்றுவிட்டார்...

ஏதும் பிரச்சனை வரும் என்று எதிர்பார்த்தேன்... ஆனால் எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் ஜெயக்குமார் என்பதால் ...அதன்பின் பள்ளிக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை...., வண்டுமுருகன் அட்டூழியமும் அடியோடு நின்றது....

(பதவியில் இருந்தாலும் சரி,இல்லாவிட்டாலும் சரி.... பாமரர்களிடம் பாங்காய் பேசும் என் பெரியப்பா ஆலடி அருணாவின் பண்பு நலனை கண்ணுற்ற எனக்கு இதுபோன்ற சிறுமதியாய் நடந்துகொள்ளும் அரசியல்வாதிகளை காணுகையில் ஏனோ சிறிதுகூட மரியாதை வருவதில்லை.... பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்ற புரட்சித் தலைவரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது)

எழுதியவர் : வை.அமுதா (8-Jul-20, 9:32 am)
பார்வை : 28

மேலே