என்னை உனக்குத் தந்தேன்

மெட்டு : பார்த்த முதல்நாளே உன்னை


பல்லவி :

பெண் :
ஆழி சுழல்போலே கண்கள் என்னை இழுக்கிறதே
கோடை மழைபோலே கண்ணின் பார்வை அணைக்கிறதே...

உன் மௌன மொழியில் படையெடுத்தாய்
மனதை வென்று நீ சிறைபிடித்தாய்
என் சுடாத சூரியன் நீயென நீயென நெஞ்சம் மலர்கிறதே...

ஆண் :
காந்த நிலவாலே என்னைக் காதல் அழைக்கிறதே
கோவில் சிலைமேலே எந்தன் காதல் பிறக்கிறதே...

உன் இதயத் துடிப்பின் இசையறிந்து
அன்பே உறைந்தேன் எனைமறந்து
என் தடாகம் தாமரை நீயென நீயென எண்ணி மகிழ்கிறதே...

சரணம் 1 :

பெண் :
தாயின் மடியினில் தலைசாய்க்கும் அழகாய்
உன்மார்பில் நான்சாய்ந்து கிடப்பேன்...
ஊரை மிரட்டிடும் உன்மீசை மறைவில்
தாயன்பை நான்கண்டு பிடிப்பேன்...

ஆண் :
ஒளிவீசும் நிலவு உடைமாற்றும் பொழுது
என்கைகள் உதவிடத் துடிப்பேன்...
சிறுபிள்ளை நீயோட நிற்காமல் துரத்தி
பூப்போல உன்னை அள்ளிச் சுமப்பேன்...

பெண் :
நீயில்லா நொடியில் நகராமல் உலகம்
வரைந்திட்ட படமாக மாறும்...
கரைமோதும் அலைபோல எனைநீயும் அணைக்க
நிழல்கூட உயிர்பெற்று வாழும்...
நிழல்கூட உயிர்பெற்று வாழும்...

ஆண் :
காந்த நிலவாலே...

சரணம் 2 :

ஆண் :
காவல் உடையினில் நீசெய்யும் குறும்பில்
அதிகாரம் எனைவெல்ல தோற்பேன்...
ஆயுள் வரையிலும் நான்கைதி ஆகி
உன்நெஞ்சில் சிறையிடக் கேட்பேன்...

பெண் :
கண்ணை மூடிக்கொண்டு உன்வாசம் பிடித்து
வீடெங்கும் உனைத்தேடி அடைவேன்...
உன்னை நானடைந்த சந்தோச நிலையில்
உதட்டோடு புதுயுத்தம் புரிவேன்...

ஆண் :
ஆனந்த அருவி மனதோரம் இசைக்கும்
உயிரோசை உனக்கென்று அறிந்தேன்...
அறியாமல் அறியாமல் எனக்காகப் பிறந்த
அவதாரம் நீயென்று உணர்ந்தேன்...

பெண் :
ஆழி சுழல்போலே...


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (9-Jul-20, 11:49 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 190

மேலே