இதுவோ படைத்திறன்

சிவபிரான், திரிபுரக் கோட்டைகளைச் சிரித்தே எரித்த சிறப்பினை உடையவன். அதனை நிந்திப்பது போலக் கவிஞர் இப்படிப் போற்றுகிறார்.

கட்டளைக்கலித்துறை

தில்லைக்குள் வாழும் சிதம்பர ரேயும்மைச் செப்பவென்றால்
அல்லற் பிழைப்பே பிழைத்திருந் தீர்முப்பு ராதிகளை
வில்லைத் தொடுத்தெய்ய மாட்டாம லேயந்த வேளைதனில்
பல்லைத் திறந்துவிட் டீரிது வோநும் படைத்திறமே? 151

- கவி காளமேகம்

பொருளுரை:

“தில்லை நகரத்தினுள்ளே வாழுகின்ற சிதம்பரரே! உம்மைப் பற்றிச் சொல்வதென்றால் நீர் துயரமான பிழைப்பினையே கொண்டிருக்கின்றவர் ஆகின்றீர்; முப்புராதிகளான பகைவர்களை வில்லைத் தொடுத்து எய்து வீரனைப் போல வெற்றி கொள்வதற்கு முடியாமல், அந்தப் போரிடும் வேளையிலே பல்லைத் திறந்து காட்டினீரே? இதுவோ நும்முடைய படையாண்மை?”

அல்லற் பிழைப்பு - கேவலமான பிழைப்பு; போர் முனையிலே பல்லைக் காட்டுதல் மிகவும் கோழைத்தனமாகும்; அதனைச் செய்தவர் தாமே நீர்? என்கின்றனர்.

சிரித்தே எரித்த வெற்றிச் செயலைக் குறித்து இவ்வாறு நிந்தாஸ்துதியாகப் பாடுகின்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jul-20, 8:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே