குமரேச சதகம் – பரத்தையர் மயக்கத்தை நம்பலாகாது - பாடல் 75

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தேடித்தம் வீட்டிற் பணக்காரர் வந்திடின்
தேகசீ வன்போலவே
சிநேகித்த உம்மையொரு பொழுதுகா ணாவிடின்
செல்லுறா தன்னமென்றே

கூடிச் சுகிப்பரென் ஆசையுன் மேலென்று
கூசாமல் ஆணையிடுவார்
கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திதழ்
கொடுப்பர்சும் பனம்உகப்பர்

வேடிக்கை பேசியே கைம்முதல் பறித்தபின்
வேறுபட நிந்தைசெய்து
விடவிடப் பேசுவர் தாய்கலகம் மூட்டியே
விட்டுத் துரத்திவிடுவார்

வாடிக்கை யாய்இந்த வண்டப் பரத்தையர்
மயக்கத்தை நம்பலாமோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 75

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

தம் வீட்டினைத் தேடிச் செல்வர்கள் வந்தால் உடலும் உயிரும் போல் நட்புக் கொண்ட தங்களை ஒரு வேளை பாராவிடின் உணவு ஏற்றுக் கொள்வதில்லை என்றே கூறி கலந்து மகிழ்வர்;

என் காதல் உனக்கே என்று மனங் கூசாமற் பொய்யாணை யிடுவார்கள்; மார்பைத் திறந்து பற்றும்படி கொடுப்பார்கள்; இதழ் பருக அளிப்பர்; சும்பனம் என்னும் கரணத்தை விரும்பிச் செய்வர்;

இனிமையாகப் பேசிக் கையிலுள்ள செல்வத்தைப் பற்றிய பிறகு மனம் வெறுக்கப் பழித்து மாறிமாறித் தூற்றுவர்; தாய்க் கிழவியைக் கொண்டு கலகம் உண்டாக்கி வீட்டை விட்டுத் துரத்துவார்கள்;

இந்த இழிந்த வேசையரின் மயக்கந்ததருங் காமச்செயல்களை வழக்கமாக நிலையென நம்பல் கூடுமோ?

கருத்து:

காதலை விரும்பாமற் பணத்தை விரும்பும் வேசையரின் நட்பு வேண்டாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jul-20, 10:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே