என் செய்வீர்

சிவபெருமான் பிச்சை எடுக்கின்றான். எதனால்? வேடிக்கையான ஒரு விளக்கத்தை அதற்குத் தருகிறார் காளமேகம்

நேரிசை வெண்பா

மாடுகிடப் பாதம் மனையா ளுடற்பாதி
தேடுதற்கும் பிள்ளை தினைக்கடம்பன் - சாடில்
அரவா பரணம்பூ ணம்பலத்தீர் பிச்சை
இரவாம னீரென்செய் வீர்? 152

பொருளுரை:

மாடோ கிடப்பாத மாகிவிட்டது! மனையாளோ உடல் பாதியாகிப் போய்விட்டாள்! பொருள் தேடி வருவதற்கு உரிய பிள்ளையோ தினைக் கொல்லைகளிலும் கடப்பமரச் சோலை களிலுமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறான். பாம்பா பரணத்தினை அணிகின்றவரே! அம்பலத்திலே யுள்ளவரே! நீர் பிச்சை எடுக்காமல் வேறு என்னதான் செய்வீர்?"

'இரவாமல் என்ன செய்வீர்?’ என்று கேட்பதன்மூலம். பெருமானின் பிட்சாடன அருட்கோலத்தைப் போற்றுகின்றார் காளமேகம்.

மாடு என்றது நந்தி பெருமானை. கிடப்பாதம் - ஒரு மாட்டு நோய், மனையாள் - உமை,

உடற்பாதி - உடலிற்பாதி; உடல் பாதியாகி நலிவுற்றவள். கடம்பன்-முருகன்.

மாடும் கிடையாயிற்று: மனைவியும் உடல்பாதியானாள்; மகனும் ஊர் சுற்றுபவனானான்; இந் நிலையிலே பிச்சை எடுக்காமல் உம்மால் எப்படி உயிர் வாழ முடியும்? என்று பாடுகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jul-20, 9:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே