குமரேச சதகம் – இதற்கு இது உறுதி - பாடல் 76

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கைக்குறுதி வேல்வில் மனைக்குறுதி மனையாள்
கவிக்குறுதி பொருளடக்கம்
கன்னியர் தமக்குறுதி கற்புடைமை சொற்குறுதி
கண்டிடில் சத்யவசனம்

மெய்க்குறுதி முன்பின் சபைக்குறுதி வித்வசனம்
வேசையர்க் குறுதிதேடல்
விரகருக் குறுதிபெண் மூப்பினுக் குறுதிஊண்
வீரருக் குறுதிதீரம்

செய்க்குறுதி நீர்அரும் பார்க்குறுதி செங்கோல்
செழும்படைக் குறுதிவேழம்
செல்வந் தனக்குறுதி பிள்ளைகள் நகர்க்குறுதி
சேர்ந்திடும் சர்ச்சனர்களாம்

மைக்குறுதி யாகிய விழிக்குற மடந்தைசுர
மங்கைமரு வுந்தலைவனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 76

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மைக்கு அழகு செய்யும் விழிகளையுடைய குறமங்கை (வள்ளியம்மை)யும், தேவயானையும் விரும்பும் மணவாளனே!, மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

(வீரன்) கைக்கு நலந்தருவன வேலும் வில்லும்; இல்லத்திற்கு நலந் தருபவள் இல்லாள்; செய்யுளுக்கு நலந்தருவது பொருளிருத்தல்; பெண்களுக்கு நன்மை கற்புடன் இருத்தல்; சொல்லுக்கு நன்மையை ஆராய்ந்தால் உண்மை கூறுதல்;

உடம்புக்கு நலந்தருவோர் தமயனுந் தம்பியும்; அவைக்களத்திற்கு நன்மை புலவர் பெருமக்களிருத்தல்; பரத்தைகளுக்கு நன்மை பொருளீட்டல்; காமுகருக்கு நலம் பெண்கள்; முதுமைக்கு நலம் உணவு; வீரருக்கு நலம் அஞ்சாமை;

நிலத்திற்கு நலம் நீர்; அரிய உலகிற்கு நன்மை நல்ல ஆட்சி; வளமிக்க படைக்கு நன்மை யானைப்படை; செல்வத்திற்கு நன்மை பிள்ளைகள்; நகரத்திற்கு நன்மை அங்கு வாழும் நல்லோர்களாகும்.

அருஞ்சொற்கள்:

சத்தியம் - உண்மை,வித்வசனம் - புலவர் பெருமக்கள், உறுதி - நன்மை (உறுவது என்று பொருள்
சர்ச்சனர் - நல்லோர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jul-20, 10:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே