இன்பமே இன்பமே

கட்டான தேகத்தில் கனியிதழ் தீரத்தில்
முட்டிவந்த மோகத்தில் விட்டுவந்த நாணத்தை
இட்டுவந்த பெண்மயிலை தொட்டுவந்த பூங்காற்றே
தட்டாமல் தழுவாமல் கட்டழகை கடந்துவா

சொட்டுத்தேன் தரும்சுகத்தை பாட்டுந்தான் தருமென்று
காட்டித்தான் உரைப்பாயோ தொட்டுத்தான் கரைப்பாயோ
மட்டிலா ஞானத்தை மட்டும்தான் கொடுப்பாயோ
தொட்டிலாடும் சந்தியிலே தாலாட்டும் படிப்பாயோ

விட்டிலாடும் தீச்சுடரே வீட்டிலாடும் குலவிளக்கே
பட்டிலாடிப் பயில்வதற்கே பூத்துவந்த புதுமலரே
வட்டவிழி பார்வையிலே வனப்புகாட்டும் ஆரணங்கே
கட்டிலாடும் காதையிலே கனிந்துவரும் கருப்பொருளே

வாட்டமுறும் பொழுதெலாம் நோட்டமிட்டு நெருங்கிவந்து
வாட்டம்விட்டு போகுமட்டும் சுற்றிநின்று அரவணைந்து
கூட்டத்தில் இருந்தாலும் குழுவாகத் திரிந்தாலும்
ஓட்டத்தின் நடவிலேயும் ஓயாமல் தொடர்வாயோ

மீட்டுகின்ற விரல்களின் வலியிலே பிறந்துவந்து
கேட்பவர் செவிகட்கு சுகம்வார்க்கும் சந்தமென
ஆயிரமாய் துன்பங்கள் ஆட்டிவைக்கும் வேளையிலும்
ஆட்படும் நெஞ்சுக்கு அமைதிகாண நல்குவாயோ

துன்பத்தின் அடியொற்றி நீதொடர்ந்து வருவாயோ
உன்னைப் பின்தொடர்ந்தே துன்பங்கள் தாம்வருமோ
துடிக்கின்ற வேளையிலும் துளியேனும் சுகம்காட்டி
மடிகின்ற நாள்வரையும் மனதிலே படர்கின்றாய்

காட்டுக்குள் கிடந்தாலும் வீட்டுக்குள் இருந்தாலும்
நாட்டுக்குள் தலைவர்கள் ஓட்டுக்கே அலைந்தாலும்
பாட்டுக்குள் பொருளாக பண்பிலே கருவாக
கூட்டுக்குள் உயிர்வாழ குலவுவாய் தெள்ளமுதே

இன்பம் என்றே மானிடர் அழைக்கின்றார்
உன்னை நினைத்தே அனுதினம் பிழைக்கின்றார்
பிறந்தது முதலே உனைதான் தேடுகின்றார்
இறக்கும் முன்பேனும் கண்டுவிட ஓடுகின்றார்

வீண்வேலை என்றே அறிந்தவர் சொன்னாலும்
பைத்தியக் காரனென்று அன்னாரை சாடுகின்றார்
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி
வருந்தும் உலகத்தின் நியாயத்தை என்னவென்பேன்jQuery171020476375627786503_1594550600761

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (12-Jul-20, 12:38 am)
பார்வை : 62

மேலே