குமரேச சதகம் – வறுமையில் சிறுமை - பாடல் 77

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வறுமைதான் வந்திடின் தாய்பழுது சொல்லுவாள்
மனையாட்டி சற்றுமெண்ணாள்
வாக்கிற் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத
வசனமாய் வந்துவிளையும்

சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது
சிந்தையில் தைரியமில்லை
செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்மாம்
செல்வரைக் காணில்நாணும்

உறுதிபெறு வீரமும் குன்றிடும் விருந்துவரின்
உயிருடன் செத்தபிணமாம்
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்புசென்
றொருவரொரு செய்திசொன்னால்

மறுவசன முஞ்சொலார் துன்பினில் துன்பமிது
வந்தணுகி டாதருளுவாய்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 77

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

(ஒருவனுக்கு) வறுமை வந்தால் அன்னையும் குற்றங் கூறுவாள்; இல்லாளும் சிறிதும் மதியாள்; வாயிலிருந்து வரும் மொழிகள் எல்லாம் தீயமொழிகளாக மாறிவிடும்;

இழிவும் நீங்காத கவலையுமே அன்றி உள்ளத்தில் வீரம் இராது; நல்ல சபையிலே போய்வர நாணம் உண்டாகும்; பணமுடையோரைக் கண்டால் உள்ளம் வெட்கமடையும்,

நன்மை தரும் வீரமும் குறைந்துவிடும்; விருந்தினர் வந்தால் உயிருடன் இறந்த பிணமாக நேரும்; உலகத்தார் இகழ்வர்; பெருமையுடையோர் எதிரிற் போய் ஒரு வறுமையுடைய ஒருவர் ஒரு செய்தியைக் கூறினால் மறுமொழியும் விளம்பார்; துன்பத்திலே துன்பமான இவ்வறுமை (ஒருவருக்கும்) வந்து சேராமல் அருள் செய்வாய்.

கருத்து:

வறியவர் இவ்வுலகில் எவ்வகையினும் இன்பம் அடையார். வறுமையுறாமல் உழைத்துப் பொருள் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-20, 12:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே