கோபமெனும் தீயோனைக் கூடாது மெய்யுணர்வாம் தூயோனைக் கொள் - கோபம், தருமதீபிகை 635

நேரிசை வெண்பா

பாபம் பழிவளர்த்துப் பாவியெனப் பேர்விளைத்துத்
தாபம் மிகச்செய்யும் சண்டாளக் - கோபமெனும்
தீயோனைக் கூடாதே; தேர்ந்தறிந்து மெய்யுணர்வாம்
தூயோனைக் கொள்க துணை. 635

- கோபம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பாவம் பழிகளை வளர்த்து உன்னைப் பாவி ஆக்கிக் கோபம் கொடிய துயரங்களைச் செய்யும், நீசமான அத்தீயவனைச் சிறிதும் அணுகாதபடி விலக்கி மெய்யுணர்வாகிய தூயவனைத் துணைக் கொள்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

புகழும் புண்ணியமும் அதிசய செல்வங்கள். சீவர்களைத் திவ்விய நிலைகளில் உயர்த்துகின்றன. அவற்றை அடைந்து கொள்வதே உயர்ந்த பிறவிப் பயன் என மேலோர் கருதியிருக்கின்றனர். தன்னைப் புகழ்ந்து பேசும் பொழுது எந்த மனிதனும் வியந்து விழைந்து கேட்கிறான். புகழ்ச்சியை யாவரும் விரும்பி வருதலால் அதன் அதிசய மகிமை அறியலாகும். சீவ அமுதமான இத்தகைய புகழ் புண்ணியங்களை அடையவே மனிதன் உரிமையோடு உயர்ந்த நிலையில் பிறந்திருக்கிறான். பிறப்பின் பேறான அவற்றை அடையாமல் இழந்து நிற்பின், அப்பிறப்புக் கடையாய் இழிந்து படுகிறது. உரிமைகளை இழந்ததோடு அமையாமல் அவற்றிற்கு மாறான பழிபாவங்களைச் செய்து கொள்ளுவது கொடிய மடமையாம்.

கோபம் பாவத் தீமைகளை விளைத்தலால் அது சீவ நாசமாய் நின்றது. அது எழுந்த பொழுது சீவ ஆதாரமாயுள்ள இரத்தம் கொதிக்கிறது; உள்ளம் துடிக்கிறது; உயிர் பதைக்கிறது; ஆகவே அதன் நிலைமையும் நீசமும் நேரே தெரிய வருகின்றன.

உயிரைப் பழிப்படுத்திப் பாவத்தில் ஆழ்த்திப் படுதுயர் செய்யும்.அதன் கொடுமை கருதி ’சண்டாளக் கோபம்’ என்றது. நீசன், சண்டாளன், கொலைபாதகன் என மனிதரை நிலைதிரித்துப் புலையாக்கி வருவது எது? இந்தக் கேள்விக்கு விடையாகக் கோபமே தடையின்றி எதிர்வரும். கோபம் மூண்டு நீண்ட போதுதான் மனிதன் கொலை செய்ய நேர்கின்றதால், கொலைஞன் பாவி, பாதகன், நீசன் என்று பழிபட்டு அழிகின்றான்.

கலகம், சண்டை, குத்து, வெட்டு, கொலை என்னும் புலைகள் எல்லாம் கோபத்தின் விளைவுகளாய் வருதலால் மனித சமுதாயம் கொடிய துயரங்களை யாண்டும் அனுபவித்து வருகிறது.

ஒருவன் மனத்திலிருந்து எழுந்த சினத்தால் பல உயிர்கள் பரிதாபமாய் மாண்டு மடிந்துள்ளன; அவ்வுண்மைகளைச் சரித்திரங்கள் காட்டி வருகின்றன. சினம் மூண்டதால் இனம் மாண்டது எனக் குரு குலத்தார் இங்ஙனம் குறிக்கப்பட்டுள்ளார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

வயிரமெனும் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கினுயர்
..வரைக்கா(டு) என்னச்
செயிரமரில் வெகுளிபொரச் சேரயிரு திறத்தேமும்
..சென்று மாள்வோம்;
கயிரவமும் தாமரையும் கமழ்பழனக் கருநாட்டில்
..கலந்து வாழ
உயிரனையாய்! சந்துபட உரைத்தருளென் றானறத்தின்
..உருவம் போல்வான். – 6, கிருட்டிணன் தூதுச் சருக்கம், பாரதம்

கண்ணனை நோக்கித் தருமன் இன்னவாறு வேண்டியிருக்கிறான். கோபத் தீயை மூட்டினால் இரு திறத்தாரும் ஒருங்கே அழிந்து போவோம்; அவ்வாறு நேராதபடி தூது போய்ச் சமாதானம் செய்தருள்! என அந்தச் சாந்த சீலன் இங்ஙனம் மறுகி வேண்டியிருத்தலால் கோபத்தின் தீமையை அவன் எவ்வாறு உணர்ந்திருக்கிறான் என்பதை நாம் இங்கே ஓர்ந்து கொள்கிறோம்.

வீணே கோபத்தை மூட்டித் துரியோதனன் கொதித்து நின்றமையால் பல்லாயிரம் வீரர்கள் நாசமாயினர்; பல அரசர்கள் மாண்டு மடிந்தனர்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

பெற்றிடு திருவினில் பிறந்த வெஞ்சினம்
கற்றவர் உணர்வையும் கடக்கும் அன்னது
முற்றுறு கின்றதன் முன்னம் அன்பினோர்
உற்றன கூறியே உணர்த்தல் வேண்டுமால். 91

- சூரன் அமைச்சியற் படலம், மகேந்திர காண்டம், 4801 கந்தபுராணம்

சினம் பெரிய அறிவாளிகளையும் கெடுத்துவிடும்; அதனை முற்றவிடாது அடக்கிவிட வேண்டும் என இது உணர்த்தியுளது.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

வெகுளியே உயிர்க்கெலாம் விளைக்கும் தீவினை
வெகுளியே குணம்தவம் விரதம் மாய்க்குமால்
வெகுளியே அறிவினைச் சிதைக்கும் வெம்மைசால்
வெகுளியிற் கொடும்பகை வேறொன்(று) இல்லையே. – காஞ்சிப் புராணம்

தவம், விரதம் முதலிய அரிய பல பெருமைகளையும் கோபம் கெடுத்துவிடும்; அது கொடிய பகை; அடியிடாதபடி அதனை அடியோடு ஒழித்துவிடுவதே நல்லது என இது குறித்திருக்கிறது.

’கோபம் என்னும் தீயோனைக் கூடாதே’ என்றது சினத்தின் தீமையை நுனித்து உணர்ந்து கொள்ள வந்தது. தீயவரோடு கூடினால் மனிதன் தீயவனாய்த் தீங்கு புரிய நேர்கின்றான் சேர்ந்த சேர்க்கையின்படி மனிதன் நேர்ந்து வருதலால் கொடிய தீமையாகிய கோபத்தோடு கூடின், நெடிய பாவியாய் முடிகிறான். முடிவினை முன் அறிந்து தன்னை இனிது காத்து வருபவன் என்றும் தனி மகிமையுடன் உயர்ந்து கொள்கிறான் முனிவு ஒழியின் இனிய மேன்மைகள் எதிர் விளைகின்றன.

மனத்துட் சினத்தை மருவான் தவத்தின்
இனத்துட் சிறந்தான் இனிது.

கோபம் ஒருவிக் குணம் மருவி வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jul-20, 9:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

சிறந்த கட்டுரைகள்

மேலே