கொங்கை வடு
சிவபெருமான் அருள் திருமேனியினை உடையவன் என்றாலும், அம்மையின் கொங்கைவடுக்கள் மட்டும் அவன் திருமேனியிலே ஒரு போதும் மறையாமலேயே விளங்கும் என்கிறார் காளமேகம், அரிய கற்பனைச் சுவை விளங்கும் சிறந்த பாடல் இது.
நேரிசை வெண்பா
ஆறா தொருக்காலு மையாமே கம்பருக்கு
மாறா வடுவாய் மறையாதே - பேறாகச்
செங்கையினா லேயழுத்திச் செய்யகச்சிக் காமாட்சி
கொங்கையினா லிட்ட குறி. 155
- கவி காளமேகம்
"ஐயா! தான் பெற்ற பெரும் பேறாகக் கருதிச் செவ்விய தன்மையுடைய காஞ்சிக் காமாட்சியம்மை யானவள், தன் செங்கையினாலே இறுக அழுத்தித் தழுவித் தன் கொங்கைகளினாலே இட்ட அடையாளமாகிய வடுவானது, ஒரு போதுமே நின் திருமேனியை விட்டு மறையவே மாட்டாது; என்றும் மாறாத வடுவாக அது நின்பால் விளங்கிக் கொண்டிருக்கும்.
சிவனே அனைத்துக்கும் முதலாகிய பெருமான் எனினும் அவன் அன்பர்க்கு அருளுகின்ற பெருங்கருணையும் உடையவன். அந்தக் கருணை வெள்ளத்தினாலேயே அம்மையின் கொங்கை வடுக்களை அவன் தன் திருமேனியிற் கொண்டிருக்கிறான் என்று அறிதல் வேண்டும்.
இதனால், பெருமானின் அருளும், அம்மையின் காதற்பெருக்கமும் கூறியதாயிற்று.