குமரேச சதகம் – இது இல்லாதவர்க்கு இது இல்லை - பாடல் 80

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சார்பிலா தவருக்கு நிலையேது முதலிலா
தவருக் கிலாபமேது
தயையிலா தவர்தமக் குறவேது பணமிலா
தார்க்கேது வேசைஉறவு

ஊர்இலா தவர்தமக் கரசேது பசிவேளை
உண்டிடார்க் குறுதிநிலையே
துண்மையில் லாதவர்க் கறமேது முயல்விலார்க்
குறுவதொரு செல்வமேது

சோர்விலா தவருக்கு மற்றுமொரு பயமேது
சுகமிலார்க்(கு) ஆசையேது
துர்க்குணம் இலாதவர்க் கெதிராளி யேதிடர்செய்
துட்டருக் கிரக்கமேது

மார்புருவ வாலிமேல் அத்திரம் விடுத்தநெடு
மால்மருக னானமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.80

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

வாலியின் மார்பில் உருவும்படி அம்புவிடுத்த நீண்ட உருவமுடைய திருமாலின் மருகனாகிய முருகனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

ஆதரவு இல்லாதவர்க்கு நிலையான இடம் இல்லை; முதற்பொருள் வையாதவர்கட்கு ஊதியம் இல்லை; இரக்கம் இல்லாதவர்கட்கு உறவினர் இல்லை; பொருள் இ்லாதவர்கட்குப் பரத்தையரின் நட்பு இல்லை;

நாடு இல்லாதவர்கட்கு அரசாட்சியில்லை; பசித்தகாலத்தில் உண்ணாதவர் கட்கு நல்ல நிலையில்லை; உண்மை பேசாதவர்க்கு அறம் இல்லை; முயற்சியில்லாதவர்கட்குக் கிடைக்கக்கூடிய செல்வம் இல்லை;

களைப்பு இல்லாதவர்கட்கு மேலும் வரக்கூடிய அச்சம் ஏதும் இல்லை; உடல்நலம் அற்றவர்க்கு எப்பொருளினும் விருப்பம் இல்லை; நற்பண்பு உடையோர்க்குப் பகைவர் இல்லை; (பிறர்க்குத்) துன்பம் விளைக்கும் கொடியவர்க்கு அருள் இல்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jul-20, 10:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

சிறந்த கட்டுரைகள்

மேலே