புன்னீர் கேளா

திருவண்ணாமலைத் திருக்கோயிலிலே சுவாமி தரிசனம் செய்துகொண்டிருந்தார் காளமேகம். அவருடைய கவனம் சந்நிதிக்கு முன்னால் விளங்கும் நந்திப் பெருமானின் மேற்சென்றது. ‘புல்லும் தண்ணீரும் கேளாதே கல்லுருவாக விளங்கும் நந்தீசர்’ என்று பாடுகிறார் கவிஞர்.

நேரிசை வெண்பா

நடக்கவறி யாதுகா னாலு முடக்கிக்
கிடக்கவறி யும்புன்னீர் கேளா - விடக்கை
யரைப்பணியார் சோகிரி யத்தனா ரோட்டில்
இரப்புணியார் ஏறும் எருது. 157

- கவி காளமேகம்

பொருளுரை:

“நஞ்சினைக் கையிலே எடுத்து அந்நாளிலே உண்ட சிவபெருமான், பாம்பு ஆபரணத்தையும் அணிந்த பரமன், சோணசைலத்தே அனைவருக்கும் அப்பனாகவும் விளங்கும் இறைவன், அவன் தலையோட்டிலே பிச்சையேற்று உண்கின்றவனும் ஆவான். அதனாற்போலும் அவன் ஊர்கின்ற எருதானது, நடக்க அறியாததாகி, நான்கு கால்களையும் முடக்கிக்கொண்டு கிடப்பதற்கு மட்டுமே அறிந்ததாயிருக்கின்றது! அஃதன்றிப் புல்லும் தண்ணீரும் கேட்பதற்கும் அஃது அறியாது கிடக்கின்றது.”

"அவனே ஓட்டில் இரந்து உண்கிறவன்; அவன் ஏறும் எருதுக்கு, எங்கே புல்லும் தண்ணீரும் தரப் போகிறான். அதனால், அதுவும் அவற்றைக் கேட்பதற்கும் அறியாததாகிக் கிடக்கிறது போலும்' என்கின்றனர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jul-20, 7:47 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே