குமரேச சதகம் – இதனினும் இது நன்று - பாடல் 81

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பஞ்சரித் தருமையறி யார்பொருளை எய்தலின்
பலர்மனைப் பிச்சைநன்று
பரிவாக உபசாரம் இல்லா விருந்தினிற்
பட்டினி யிருக்கைநன்று

தஞ்சமொரு முயலைய்டு வென்றிதனில் யானையொடு
சமர்செய்து தோற்றல்நன்று
சரசகுணம் இல்லாத பெண்களைச் சேர்தலிற்
சன்னியா சித்தல்நன்று

அஞ்சலார் தங்களொடு நட்பாய் இருப்பதனில்
அரவினொடு பழகுவதுநன்
றந்தணர்க் காபத்தில் உதவாதி ருப்பதனில்
ஆருயிர் விடுத்தல்நன்று

வஞ்சக ருடன்கூடி வாழ்தலில் தனியே
வருந்திடும் சிறுமைநன்று
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 81

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

ஈகையின் அருமையை உணராதவர்பால் பொருளையிரந்து பெறுதலினும் பலருடைய வீடுகளுக்குஞ் சென்று பிச்சையெடுத் துண்ணல் நன்று; அன்புடன் உபசரியாத விருந்துண்பதைவிடப் பட்டினியாக இருத்தல் நல்லது;

எளிய ஒரு முயலைக் கொன்ற வெற்றியினும் யானையொடு போர்செய்து தோற்பது நல்லது; இனிய பண்பு இல்லாத பெண்களைக் கூடுவதினும் துறவுபூணுதல் நல்லது;

பகைவருடன் நட்பாய் இருப்பதினும் பாம்பொடு பழகல் நல்லது; அருட்பண்புடையாருக்கு ஆதரவு செய்யமுடியாத நிலையினும் இறப்பது நல்லது; கரவான எண்ணமுடையோருடன் கூடிவாழ்வதினும் தனியே வருந்தும் இழிநிலை நல்லது.

அருஞ்சொற்கள்:

பஞ்சரித்து - இரந்து; பஞ்சம் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது; தஞ்சம் - எளிமை,

அஞ்சலார் - பகைவர், அந்தணர் - அருளுடையார்; அம் தண்மை உடையார் - அந்தணர்; சாதியைக் குறித்ததன்று.

கருத்து:

ஈகையின் அருமையறியார் பொருளை யிரந்து வாங்குதல் போன்ற செயல்களினும், பிச்சையெடுத்தல் முதலானவை நல்லவை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jul-20, 4:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே