குமரேச சதகம் – நிலையற்றவை - பாடல் 82

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கொற்றவர்கள் ராணுவமும் ஆறுநேர் ஆகிய
குளங்களும் வேசையுறவும்
குணம்இலார் நேசமும் பாம்பொடு பழக்கமும்
குலவுநீர் விளையாடலும்

பற்றலார் தமதிடை வருந்துவிசு வாசமும்
பழையதா யாதிநிணறும்
பரதார மாதரது போகமும் பெருகிவரு
பாங்கான ஆற்றுவரவும்

நற்றுமொரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும்
நல்லமத யானைநட்பும்
நாவில்நல் லுறவும்ஒரு நாள்போல் இராஇவைகள்
நம்பப் படாதுகண்டாய்

மற்றுமொரு துணையில்லை நீதுணை எனப்பரவும்
வானவர்கள் சிறைமீட்டவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 82

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

வேறு துணைவர் இல்லை; நீயே தஞ்சம்' என்று வேண்டித் தாழ்ந்த அமரர்களின் சிறையை
நீக்கியவனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

அரசர்களின் படையும், ஆற்றுக்கெதிர்ப்படும் பொய்கைகளும், பரத்தையரின் நட்பும், நற்பண்பு இல்லாதவரின் நட்பும், அரவுடன் பழகுதலும், மிக்கநீரிலே ஆடுதலும்;

பகைவரிடம் வருந்திக்கொள்ளும் அன்பும், பழைய பங்காளிகளின் உறவும், பிறர் மனைவியரின் கூட்டுறவும், பெருக்கெடுத்து வரும் அழகிய ஆற்று வெள்ளமும்,

நயமாகப் பேசும் கெடுமதியைக் கேட்டு நடக்கின்றவரின் நட்பும், அழகிய மதயானையின் நேசமும், பேச்சளவிலே உள்ள இனிய உறவும் ஒருநாளைப்போல நிலையாதவை; ஆகையால், இவற்றை நம்புதல் கூடாது என்று தெறிந்து கொள்.

அருஞ்சொற்கள்:
.
கொற்றம் - வெற்றி; வெற்றியுடையோர் கொற்றவர் - அரசர்.

பற்று அலார் - பகைவர் (அன்பற்றவர்). நிணறு - உறவு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-20, 3:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே