தீக்குள் விரலை வைத்தால்

பாக்கள் சுரக்கும் பாரதியே,
பாட்டுக் குதிரைகளின் சாரதியே,
தீக்குள் விரலை வைத்தால், உனக்கு
திருமாலைத் தீண்டும் இன்பமா?
தீயேயின்றி எனக்கு மட்டும்
தொட்ட இடமெல்லாம் சுடுகிறதே ஏன்?

முதல்முறையாக நான் தீக்குள்
விரலை வைத்தேன்.
ஓட்டுப்போட விரலில் மை வைத்த பொழுது.
வைத்த நாள் முதல் வயிறு பற்றி
எரிகிறது.

மணமேடையில் அமர்ந்து,
மங்கலநாண் வாங்கிய தருணம்,
தீக்குள் விரலை வைத்தேன்.
தாலியில் விரல் வைத்த நாள் முதல்
தாளித்துக் கொட்டுவது நான்தான்.

படித்தால் வேலை கிட்டுமென
தீக்குள் விரலை வைத்தேன்.
முடித்ததும் உடனே கிடைத்தது,
வேலை தேடும் வேலை.

நண்பனுக்கு கடன் கொடுத்து,
தீக்குள் விரலை வைத்தேன்.
திருப்பிக் கேட்டபோது, அவன்
திரும்பக் கடன் கேட்டான்.

பக்கத்து கம்பெனியில் சீட்டுக்கட்டி,
தீக்குள் விரலை வைத்தேன்.
நோட்டம் பார்த்த கேடுகெட்டவன்,
நாட்டை விட்டே ஓடிவிட்டான்.

வறுமை தீர திருப்பதியில்
வரம் கேட்கச் சென்று,
தீக்குள் விரலை வைத்தேன்.
பகவானைப் பக்கத்தில் பார்க்க,
பத்தாயிரம் ரூபாய் வேண்டுமாம்.

தீ அடங்க வழி சொல்,
தீர்க்கதரிசியே.
சார்வினுக்கு தகத்தக தமிழச்சாதி
மாறுமெனக் கணித்தாய்.
அது மெய்யாகி நடந்தது.
தருமம் மாயாது தமிழச்சாதி,
தலைநிமிரக் கனா கண்டாய்.
இது பொய்யாகி நடக்குது.

ச.தீபன்
நங்கநல்லூர்.
94435 51706.

எழுதியவர் : தீபன் (20-Jul-20, 5:12 pm)
பார்வை : 197

மேலே