புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 32---

புத்தன் வீட்டுப் பூக்கள் - 32

311. எத்தீமை ஆனாலும்
நம்மைத் தொடும் வரைதான் பயம் இருக்கும்
தொட்டு விட்டால் வலிதான் இருக்கும்.

312. உனக்குள் ஏற்படும் சில நொடி பயம்
நீ அடையப் போவதை இழக்க வைக்கும்
உனக்குள் ஏற்படும் சில நொடி கோபம்
நீ அடைந்ததை இழக்க வைக்கும்.

313. பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை பெண்ணடிமைத்தனம் இருக்கும்
பெண்கள் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளும் போதுதான் பெண்ணடிமைத்தனம் ஒழியும்.

314. மனிதன் வாழும் வரை தேர்போல் ஆடி அசைந்து பயணம் செய்வான்
வாழ்ந்து முடிந்தால் தேருக்குள் ஆடி அசைந்து பயணம் செய்வான்.

315. அதிகாரிகளின் கைகள் அழுக்குப் படிவதாலே
அரசாங்க பதிவேடு பலவும் தூசு படியத் தொடங்குகிறது.

316. அலட்சியமாய் வேலை செய்யும் அரசு அதிகாரிகளால்
அரசாங்க வாசலுக்கும் வீட்டுக்கும் அன்றாடம் அலைகின்றனர் மக்கள்.

317. பிடிக்காத ஒன்றைச் சிறிதும் தொடாதீர்
பிடித்த ஒன்றைச் சிறிதும் விடாதீர்
வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும்.

318. விலையின்றி அரசு தந்த அடையாள அட்டைகள்
விலையுடன் திருத்தம் செய்யப்படுகிறது.

319. சட்டையின் அளவுக்கு ஆள் தேடுவதை விட
அளவு எடுத்துச் சட்டையைத் தைத்துவிடு.

320. இருப்பதை வைத்து வாழ்வது ஒரு வாழ்க்கை
இழந்ததை நினைத்து வாழ்வது ஒரு வாழ்க்கை
ஈர்ப்பதை அடைய வாழ்வது ஒரு வாழ்க்கை.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (23-Jul-20, 9:24 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 133

மேலே