அழகரென்றார் யார்

“அழகர் கோயிலில் விளங்கும் பிரானுக்குச் சோலை மலை அழகர்’ என்றும் ஒரு பெயருண்டு. 'அவரை அழகரென்று எவ்வாறு சொல்ல முடியும்? அவருக்கு அப்படிப் பேரிட்ட அறியாமை உடையவர் யார்?" இப்படிக் கேட்கிறார் கவி காளமேகம்

நேரிசை வெண்பா

மீனமுகம் ஆமைமுக மேதினியெ லாமிடந்த
ஏனமுகஞ் சிங்கமுகம் என்னாமல் - ஞானப்
பழகரென்றுஞ் சோலைமலைப் பண்பரென்றும் உம்மை
அழகரென்றும் பேரிட்டார் யார்? 163

பொருளுரை:

மீனமுகம், ஆமைமுகம், உலகமெல்லாம் தோண்டிப் பறித்த பன்றிமுகம், சிங்கமுகம் என்றிப்படி எல்லாம் சொல்லாமல், அறிவின் கனிவைக் கொண்டவரென்றும், சோலைமலையிடத்து வாழும் பண்பாளரென்றும், அழகிய திருமேனியினை உடையவரென்றும் உம்மைப் பேரிட்டு அழைத்தவர்தாம் யாவரோ?”

திருமாலின் மச்சாவதாரம், வராகவதாரம், கூர்மாவதாரம், நரசிம்மாவதாரம் ஆகியவற்றைக் குறித்து, அவரை அப்படி அழையாமல், ஏணிப்படி அழகர் என்றனர்? என்று வினவுகிறார் கவி காளமேகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jul-20, 8:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

மேலே