வீதி வரக் கண்டு

இராமபிரான் மிகவும் அழகன், பூமியிடத்தே இருந்து தோன்றியவளான சீதையின் கணவன்; அவன் திருவீதியிலே பவனி வருகின்றான்! அவன் அழகிலே மயங்கினாள் ஒரு பெண். தன் அரையிடத்து ஆடையும் நெகிழ்ந்து காலில் விழ, அவள் தன்னை மறந்து. அவனையே காமுற்று நிற்கிறாள். இப்படிக் கற்பித்துப் பாடுகிறார் காளமேகம்.

நேரிசை வெண்பா

ஓரொருமா வொன்றுமா வொன்பதுமா வின்கலையை
ஈரொருமா மும்மாவுக்(கு) ஈந்ததே - பாரறியப்
பொன்மானின் பின்போன பூமங்கை யாள்வாரைக்
கன்மாவின் வீதிவரக் கண்டு. 164

- கவி காளமேகம்

பொருளுரை:

'உலகமெல்லாம் அறியும்படியாகப் பொன்மானின் பின்னே சென்றவர் பூமங்கையான சீதையை ஆட்கொண்டவரான இராமபிரான், தன் புண்ணிய வசத்தினாலே அவர் திருவீதியிலே உலா வருதலைக் கண்டனள் ஒப்பற்ற ஒரு பெண்ணணங்கு. அவர்மேல் அவள் மையலும் கொண்டனள். அந்தக் காட்சி அவளுடைய காலுக்கு அளித்து விட்டதே? என்ன கொடுமை இது.

ஒரொருமா ஒப்பற்ற ஒரு திருமகள் போல்வாள். ஒன்றுமா ஒன்பதுமா-பத்துமா, அரை.ஈரொருமா மும்மா - ஐந்துமா கால்.

பொன் மான் - மாயமான், சீதையின் விருப்பத்தை நிறைவேற்ற இராமபிரான் துரத்திச்சென்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jul-20, 8:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

மேலே