என்ன பலன்

ஒன்றைச் செய்தால், செய்தவர்க்கு ஏதாவது அதனாற் பலன் இருக்க வேண்டும் பலனில்லாமல் ஒரு செயலைச் செய்பவர்களை உலகம் என்றும் மதியாது. இந்த உலக உண்மையைச் சிவ பெருமான் மீதும் ஏற்றித் திருவிருத்தி நாதரைப் போற்றுகின்றார் கவி காளமேகம்.

நேரிசை வெண்பா

திருவிருத்தி நாதர் திருவளியா தென்னைக்
கருவிருத்தி யென்னபலன் கண்டார் - எருதுபோய்க்
கோட்டிபத்தி லேறினரோ கோவணம்போய்ப் பட்டாச்சோ
ஓட்டிலிரந் துண்டதும்போச் சோ? 165

- கவி காளமேகம்

பொருளுரை:

"திருவிருத்திநாதர் தம்முடைய திருவடிப்பேறாகிய செல்வத்தினைத் தந்தருளாமல், என்னைக் கருக்குழியிலே இருத்தியதனாலே என்ன பலனைக் கண்டுவிட்டார்?

தம்முடைய எருதைக் கைவிட்டுக் கொம்புகளையுடைய யானையின் மேலே அவர் ஏறிவிட்டாரோ அல்லது, அவருடைய கோவணம் போய் உடுத்துவதும் பட்டாக அவருக்கு உயர்ந்ததோ?

அல்லது, ஓட்டிலே இரந்து உண்ணுகின்ற தன்மையாவது அவருக்கு இல்லாமற் போயிற்றோ? எதுவும் இல்லையே! இருந்தும் என்னைக் கருவிருத்தி அவர் கண்ட பலன்தான் என்னவோ?

தம்மைக் கருக்குழியில் தள்ளியதற்கு வருந்தி, இப்படிப் பாடுகின்றார் கவிஞர். இதனால் தம் பிறவியினை அறுத்தருளப் பெருமானை வேண்டினரும் ஆம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jul-20, 1:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56

சிறந்த கட்டுரைகள்

மேலே