புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 40---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௪௦

391. பழுதாகி தூசு படிந்து மூலையில் கிடக்கும் பொருள்களைப் போல
உழைக்காதவர் வாழ்க்கை துன்பங்களால் நிறைந்து முன்னேற்றமின்றி இருக்கும்.

392. தாவரங்களின் உச்சியில் கனம் ஏறினால் அந்தத் தாவரம் தரை சாய்வது போல்
மனிதரின் உச்சியில் கனம் ஏறினால் அவரது வாழ்க்கையும் தலை சாயும்.

393. சூரியனின் நகர்வுக்கு ஏற்ப ஒரு மரத்தின் நிழல் மேற்கிலும் கிழக்கிலும் சாய்வது போல்
காலச் சூழலின் நகர்வுக்கு ஏற்ப மனிதரின் மனம் நன்மையிலும் தீமையிலும் விழுகிறது.

394. வெயிலில் காய்ந்து கொண்டே இருக்கும் துணி இற்றுப் பயனின்றிப் போவது போல்
தீய வழியில் நிலைப்பவரின் வாழ்வும் பயனின்றிப் போகும்.

395. மனதில் தோன்றும் ஆசைகள் பூக்களைப் போல
சிலவை நிறைவேறும் சிலவை வதங்கி உதிர்ந்தே விழும்.

396. தட்டிக் கொடுக்க மனமில்லையோ?...
தட்டிக் கொடுக்க ஆளில்லையோ?...
இந்த உலகில் பலபேர் மனம் தளர்ந்தே இருக்கின்றார்கள்.

397. உன்னைப் போன்றவர்களைத் தட்டிக் கொடுத்துத் தயாராக்கு
உன்னை ஒருவன் தயாராக்குவான்.

398. ஒவ்வொரு மனிதரையும் இந்த உலகம்
கட்டி அணைக்கும் இல்லை என்றால் எட்டி உதைக்கும்.

399. எந்த இடத்தைச் சார்ந்து இருக்கிறாயோ?... அந்த இடத்திற்கு
உண்மையாக இரு ஊமையாக இருக்காதே.

400. உலகில் தோன்றும் உயிர்கள் அனைத்தும் தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும்
தன்னை அறியாமல் தன் அடையாளத்தை விட்டே செல்லும்.


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (2-Aug-20, 8:42 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 163

மேலே