சில தமிழ் சொற்களும் அதன் உண்மையான பொருளும் -- தெரிந்துகொள்வோம்

தமிழ் சொற்கள் பெரும்பாலும் காரண காரியத்தால் உருவானவை . ஒரு செயலின் பொருட்டோ தொழிலின் பொருட்டோ தொடர்புற்று தானாக உருவானவை அல்லது முன்னோர்களால் உருவாக்கப்பட்டவை . இந்த காணத்தினால் தான் தமிழ் இன்னமும் உயிர் வாழ்கிறது என்பதில் ஐயமில்லை . ஊர் பெயர்களும் இவ்வாறே உருவானவை தான் , இந்த வரிசையில் சில சொற்களையும் அதன் பொருளையும் இங்கே பார்ப்போம் . கீழே குறிப்பிடப்பட்டுள்ள கீரைகள் மற்றும் உணவுப் பொருட்கள் நாம் அன்றாடம் உண்ணுவது தான் . ஆனால் அதன் பெயரின் பொருள் அல்லது பெயருக்கான காரணம் என்ன என்பது நம்மில் பலருக்கு தெரியாத ஒன்று .

வேப்பிலை --- வெப்பம் + இலை

உடல் வெப்பத்தை இல்லை என்றாக்கும் வேப்பிலை .

கரு +வெப்பம் + இல்லை --- கருவேப்பிலை

கருப்பை வெப்பத்தை , அக வெப்பத்தை அழித்தொழிக்கும் திறன் கொண்டது கருவேப்பிலை

அகம் + தீ -- அகத்தீ

உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் கீரை அகத்திக் கீரை .

சீர் + அகம் --- சீரகம்

அகத்தின் சூட்டை , மற்ற தன்மைகளை , சத்துக்களின் ஏற்ற இறக்கங்களை சீர் செய்யும் ஒரு பயிர் வகை அதுதான் சீரகம் ,

பெருங்காயம் -- இந்த பெரிய காயத்தின் (உடலின் ) தேவையற்ற காற்றை , செரிமானத்துக்கு தொந்தரவு செய்யும் தேவையற்ற காற்றை வெளியேற்றும் பெரிய காரியத்தை செய்யும் சிறு துகள்கள் என்பதே பெருங்காயம் என்பது .

வெம்மை +காயம் -- வெங்காயம்

உடலின் வெம்மையை போக்கும் வெங்காயம் , குறிப்பாக சின்ன வெங்காயம் . வெங்காயம் என்றாலே அது சின்ன வெங்காயத்தை தான் குறிக்கும் . பெரிய வெங்காயம் பழங் காலத்தில் தமிழ் நாட்டில் பயன் படுத்த படவில்லை . பெரிய வெங்காயத்தாள் உடலுக்கு பெரிய அளவில் நன்மை ஏதுமில்லை . அது உணவின் சுவைக்காக பயன்படுத்தப்படுவது .

பொன் + ஆம் + காண + நீ --- பொன்னனாங்கண்ணி

பொன்னாங்கண்ணி உண்டால் உடல் பொன் போல் ஆகும் காண் நீ .

கரிசல் +ஆம் + காண் + நீ --- கரிசலாங்கண்ணி

காய்ச்சிய எண்ணெய் கூந்தலை கரிசலாக்கும் காண் நீ

முடக்கத்தான் கீரை --- முடக்கு + அற்றான் + கீரை

முடக்கு வாதத்தை நீக்கும் அல்லது வர விடாமல் கால் , கைகளை பாதுகாக்கும் கீரை .

நிலக்கடலை / வேர்க்கடலை -- (ground nut ) நிலத்திலிருந்து கிடைக்கும் கடலை . வேரிலிருந்து கிடைக்கும் கடலை .

சொற்களுக்குள் மருத்துவம் வைத்தான் . மருந்துகளை உணவில் வைத்தான் . உணவே மருந்தென்றான் , மருந்தே உணவென்றான் தமிழன் .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (5-Aug-20, 12:33 pm)
பார்வை : 47

மேலே