வாகனங்கள்

பிரமதேவன், திருமால், சங்கரர், இந்திரன், குபேரன் ஆகியோரின் வாகனங்களைக் குறிப்பிட்டுச் சொல்லிய செய்யுள் இது. கடைமொழி மாற்று என்னும் வகையைச் சார்ந்தது. 'விதிக்காம்' என்பதனை முதலிற் கொண்டு பொருத்தி உரை காணவேண்டும்.

நேரிசை வெண்பா

அன்னம் திருமாலுக் காங்கருடன் சங்கரற்காம்
பன்னிடபம் இந்திரற்காம் பார்க்குங்கால் - துன்னு
மதவா ரணமளகை மன்னனுக்காம் பஞ்ச
கதிசேர் புரவிவிதிக் காம். 167

- கவி காளமேகம்

பொருளுரை:

"பிரமனுக்கு அன்னம் வாகனமாகும்; திருமாலுக்குக் கருடன் வாகனமாகும்; சங்கரற்குப் புகழ்மிக்க எருது வாகனமாகும்; சொல்லுமிடத்து, இந்திரனுக்கு மதம் நிறைந்த வெள்ளை யானை வாகனமாகும் அளகாபுரி மன்னனாகிய குபேரனுக்குப் பஞ்ச கதியும் பொருந்திய குதிரை வாகனமாகும்"

விதி - பிரமன், அளகை மன்னன் - குபேரன், இவன் வாகனங்களுள் ஒன்று குதிரை. பஞ்சகதி சேர் புரவி' என்றதனால், ஐந்து புலன்களின் ஓட்டத்தையுடைய புருஷ வாகனத்தைக் குறித்ததாகவும் கொள்வர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Aug-20, 1:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே