தேர்தல்

========
பிழையானவர்களைத்
தேர்ந்தெடுப்பதற்கான
சரியான பாடத்தைக்
கற்றுத்தருகிறது என்பதால்தான்
பள்ளிக்கூடங்களில் வாக்கெடுப்பு
நடத்தப்படுகிறதோ
**
சரியானவர்களாக
இருப்பார்கள் என நம்பும்
எவரையும்
பிழையான வழியிலேயே
கூட்டிச் சென்றுவிடுவதில்
கவனமாய் இருக்கும் தேர்தல்
தெரிந்து ஏமாறும்
தவறு செய்யும் நம்மை
தெரிந்தே வைத்திருக்கிறது.
**
கள்வர்களுக்கு
மகுடம் சூட்டிக்
கௌரவப்படுத்துவதையே
கௌரவமாகக் கருதுகிற தேர்தல்
வாக்குப் பிச்சைக்கேட்டு
வந்தவர்கள் வாசலில்
நம்மை பிச்சைக்காரர்களாக
நிறுத்தி வைக்கிறது
*
வசதிவாய்ப்பே இல்லாதவர் வந்து
வசதிகள் எல்லாம் செய்து
கொடுப்பேன் என்றுரைக்கும்
வசீகர வாசக விளக்கில்
விட்டில்களாய் நாம் விழ
அவரை வசதிபடைத்தவராக்கும்
வசதிகள் செய்து கொடுக்கிறது
**
விருப்பத் தேர்வென்ற
விருப்பமில்லாத் தேர்வை
வைத்துக்கொண்டு
விருப்பமில்லாதவர்களையும்
வெள்ளை வேட்டிக் கட்டவிட்டு
அழகுப் பார்க்கிறது
**
சனநாயகப் புல்வெளிகளில்
வறுமையை மேயும்
அப்பாவிப் பசுக்களிடத்தே
வாக்குப் பால்கறக்க
மேடை வாளிகளில்
இலவசப் பொய் பிண்ணாக்குதனை
கலந்து தண்ணிகாட்டும்
வேட்பாள மேய்ப்பர்கள்
காரியம் முடிந்ததும் அறுப்புக்கு
அனுப்பக் காத்திருக்கும் உண்மைக்கு
உத்தரவாதம் அளிப்பதே
இந்த ஒய்யார தேர்தல்
**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Aug-20, 1:31 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : therthal
பார்வை : 42

மேலே