ஒரு வழிப் பயணம்

கல்லூரி முடிந்தது
பேருந்தில் ஊர்நோக்கி
வழக்கமான பயணம்!
எதிர்பார்த்த கூட்டமில்லை
இருக்கையும் காலியில்லை!
கையில் அமர்ந்திருந்த
முந்நூறு கிராம் புத்தகம்
மூணு கிலோவாக கணத்தது!
இருக்கையில் அமர்ந்திருக்கும்
பெரியவரிடம் ஒப்படைத்து விடு
மனது சொன்னது; கரம் செய்தது!
கண்களின் பார்வையோ வேறுபக்கம்!
இதற்கு முன் பார்த்திடாத முகம்
பார்த்தவுடன் மனதில் பதிந்த முகம்!
பேரழகியில்லைதான்; ஆனாலும் பெரிய அழகிதான்!
அடுத்தடுத்த நாட்கள்
அதே பேருந்தை தே(ஓ)டிப்பிடித்து பயணம்!
கண்களோ அழகியிடமிருந்து
திரும்பவில்லை!
அங்கிருந்தோ மறு பார்வையில்லை!
நண்பர்களிடத்து சி.பி.ஐ. போல்
விசாரணை!
பிரபல தனியார் கல்லூரியில்
மூன்றாமாண்டு படிப்பு!
ஜீவநதியாம்  தாமிரபரணி
கரையோர ஊர்தான் குடியிருப்பு!
அடுத்த சேதி என்ன?!!! சாதிதான்!
அதுவும் அந்நியமில்லை!
வாரமிரண்டு விரைந்து நடந்தது!
தட்ட தட்ட மலையும் கரையும்
அங்கோ கண்கள் கரைந்தது!
முதன்முறை ஓர் பார்வை
வால்வோ குளிர்சாதன பேருந்தில்
செல்வதுபோன்ற உணர்வு!
தொடர் பார்வைகள் வந்து விழுவது
தொடர்ந்தது!
இங்கோ பால் வடியும் முகம்
சோகம் உரைக்கும் தேகம்!
அதனால் அங்கிருந்து வருவது
பரிதாப பார்வையாக இருக்குமோ!
இல்லை பேசதுடிக்கும் காதல் பார்வைதானோ!
குழம்பி தவித்தது மனம்
இப்படியே ஓடிற்று மூணு வாரம்!
இரண்டு நாட்கள் ஆள் வரவில்லை
சரக்கு ரயில் பெட்டியில்
இருப்பதுபோன்ற வெறுமை!
மறுபடியும் வசந்தம் வந்தது!
கலைஞர் கூறியதுபோல்
கண்கள் பணித்தது;இதயம் இனித்தது!
நான்கு கண்களும் அடிக்கடி
நலம் விசாரித்து கொண்டன!
எல்லா உறுப்புகளும் வேலை செய்ய
வாய் கோமாவில் வீழ்ந்ததுதான்
பிரச்சினை!
பக்கம் நெருங்கியபோதெல்லாம்
வார்த்தை எழவில்லை!
பயமும் சேர்ந்து கட்டிபோட்டது!
ஏழு மாதம் கழிந்தது
தேவதையின் படிப்பு முடிவடைந்தது!
ஒருதலைக் காதலும்
முறிந்து போனது!
ஆனாலும் அந்த பேருந்து
நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது இப்போதும் மனச்சாலையில்...

எழுதியவர் : (11-Aug-20, 12:34 am)
சேர்த்தது : Arun ray
Tanglish : oru vazhip payanam
பார்வை : 269

மேலே