பொறாமை யுறின் எரிந்தழிவீர் உண்மை இது - பொறாமை, தருமதீபிகை 628

நேரிசை வெண்பா

வீரம் அறிவு வினையாண்மை மெய்யொழுக்கம்
ஈரம் பெருக இருமினோ – வாரம்
புரிந்திழிவே கொண்டு பொறாமை யுறினோ
எரிந்தழிவீர் உண்மை இது. 628

- பொறாமை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அறிவு, ஒழுக்கம், ஆண்மை, வீரம், அன்பு முதலிய பண்புகள் மருவி வரின் இன்ப நலங்கள் பெருகி வரும், பொறாமை கொண்டு புன்மை புரிந்தால் இன்மையில் இழிந்து எரிந்து அழிவீர்! இவ்வுண்மையை உணர்ந்து உய்மின் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயர்ந்த நீர்மைகளைப் பழகி வாழ்க என இது உணர்த்துகின்றது. நல்ல நினைவுகளால் எல்லா மகிமைகளும் விளைகின்றன.

தோய்ந்த பழக்கத்தின்படியே எவரும் வாய்ந்து வருகின்றனர். நல்ல நீர்மை மருவிவரின் எல்லாச் சீர்மைகளும் பெருகி வருகின்றன. வெளியே விரிந்து விளங்கும் மேன்மைகளுக்கெல்லாம், மூலகாரணமான பான்மை உள்ளே தோய்ந்திருக்கிறது. எண்ணங்களிலிருந்தே எல்லாம் விளைந்து விரிந்திருத்தலால் மனித உலகத்தின் மூலவித்துக்களாய் அவை முனைந்திருக்கின்றன. வித்தின்படியே விளைவுகள் விரிகின்றன.

நல்ல தன்மைகளையுடையவர் நல்லவர்களாய் வருகின்றனர்.
பொல்லாத புன்மைகளையுடையவர் புல்லராய் உறுகின்றனர்.

இளமையிலிருந்தே நல்ல வழிகளில் பழகி வருபவர் எல்லா நிலைகளிலும் உயர்ந்து விளங்குகின்றனர். அவ்வாறு பழகாதவர் அவலமாய் இழிந்து நிற்கின்றனர்.

நல்லவன், பெரியவன் என்று பேர் பெற எல்லாரும் விரும்புகின்றனர். அந்த நன்மையும் தன்மையும் அகத்தே இல்லாதவர் புறத்தே உயர்ந்த மேன்மைகளை அடைய முடியாமல் இழிந்து நிற்கின்றனர்.

தமது இழிநிலைகளை உணர்ந்து கொள்ளாமலே கழிபெருஞ் செருக்கராய்ப் பலர் களித்துத் திரிகின்றனர். இனிய மேன்மைகளை இழந்த பொழுது மனித இனம் மாவின் இனமாய் மருவி நிற்கின்றது.

மனித உருவில் மருவியிருந்தாலும் மாடு, ஆடு, பன்றி, நாய் முதலிய விலங்கின் சுபாவங்களையே பலர் தழுவி நிற்றலால் அந்த மக்களை மாக்கள் என்று உயர்ந்தோர் தகுந்த காரணமாய் வழங்க நேர்ந்தனர். மொழிக் குறிப்பு பழிக்குறிப்பாய் வந்தது. பண்பு குன்றியபொழுது மனிதன் பாழ்படுகின்றான்.

வீரன், வள்ளல், நீதிமான், தருமவான் என இன்னவாறு மேலான நிலைகளில் விளங்கி நிற்பவர் மேன்மையான பான்மைகளை நன்கு அடைந்திருக்கின்றனர். அகத்தின் நீர்மையால் புறத்தின் சீர்மை விரிந்து மிளிர்கின்றது.

யாண்டும் நிலை குலையாமல் எவ்வழியும் தலைமையாய் நெறியோடு நிலைத்து நிற்கும் நீர்மை வீரம் என வந்தது. போர் வீரன், கல்வி வீரன், தான வீரன், தரும விரன் என வருவன கரும வகையால் மருவின. அறிவு என்பது உலக அறிவு, நூலறிவு, உண்மை யறிவு என நிலைமைகளை நோக்கி நேர்ந்து நிற்கின்றது. எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாமோ அதை அறிவதே மெய்யறிவாம். அது பிறவித் துன்பங்களை நீக்கிப் பேரின்பம் அருளுகின்றது.

இன்பம் துன்பம் என்னும் இந்த இரண்டு ஒலிகளும் மனித சமுதாயத்தின் உள்ளச் செவிகளில் என்றும் ஒலித்துக் கொண்டு யாண்டும் கலித்து நிற்கின்றன. எது இன்பம்? எது துன்பம்? இந்தக் கேள்விகளுக்குச் சரியான விடையைத் தெளிவாக அறிய வேண்டும். பொறிகளின் வழிகளிலேயே ஓடி எவ்வழியும் சீவ கோடிகள் வெறி கொண்டு அலைகின்றன. யூக விவேகங்கள் யாவும் மோக மயக்கங்களாய் மூண்டு உழலுகின்றன. புறத்தே புலையாய்த் திரிதலால் அகத்தே உள்ள நிலையான இன்பத்தை அடையாமல் போகின்றன. தன்னை உணர்ந்து பாராமையால் இன்னல் பலவும் எழுந்து வர நேர்ந்தன.

புறநோக்கு புலையாய்த் துன்பம் தருகிறது;
அகநோக்கு நிலையாய் இன்பம் அருளுகின்றது.

நீ யார்? எங்கிருந்து வந்தாய்? எதற்காக வாழ்கின்றாய்? கை கால் முதலிய அவயவங்களோடு கூடியுள்ள உடலை மூடியாய்க் கொண்டு வந்துள்ள நீ இந்தக் கூடு பிரியுமுன்னரே நாடி அடையவுரியதை அடைந்து கொள்ள வேண்டும். பிறவியில் துன்பங்களே பெருகியுள்ளன. பிறவாமையிலேதான் பேரின்பம் மருவியுள்ளது. என்றும் பிறவாத ஒரு பொருளிலிருந்தே நீ பிரிந்து வந்திருக்கிறாய். அவலமான இந்த வரவில் எல்லையில்லாத அல்லல்களும் கவலைகளும் உன்னைத் தொடர்ந்து வந்திருக்கின்றன. துயரமான இந்த அலமரல்களிலிருந்து விலகி உய்பவரே நிலையான மேலோராய் நிலவி நிற்கின்றார், பிறவிப் பயனைப் பெற்றவர் பிறவாத பேரின்ப நிலையில் பெருகியிருக்கின்றார்,

எடுத்த பிறவிக்(கு) இனியபயன் என்றும்
அடுத்த பிறவி அறல்.

பிறவியையுற்று வெளி வந்துள்ள பிராணிகள் அது அற்று ஒளி பெற்று உயர்ந்து போதலே உறுதியான இன்பப் பேறாய் இனிது அமைந்துள்ளது. உண்மையை உணர்ந்தவர் ஊறு நீங்கி உய்தி பெறுகின்றனர்.

நாளும் ஒரு கணமாவது உன்னை நினைந்து பார்.
உடலளவில் உழன்று ஊனமாய் ஒழிந்து போகாதே.
உள்ளத்தைப் புனிதம் ஆக்கு. .
உயிரை நோக்கி உயர்ந்து வாழ்.
எல்லா ஆக்கங்களும் உன்னை நோக்கி வரும்,

மனிதனது உண்மையறிவுக்கு உரிய பயன் இத்தகைய தத்துவ நிலைகளில் பழகித் தன்னை அடைந்து கொள்வதேயாம்.

சீலம், கருணை முதலிய செவ்விய நீர்மைகள் தோய்ந்து இவ்வாறு மேலான நிலைமையை அடையவுரிய மனிதன் கீழான பொறாமையைத் தழுவிக் கெடுவது பிறவியைப் பாழாக்கிய படியாம்.

அதன் நீச நிலையை நன்கு தெரிய பொறாமையுறின் எரிந்து அழிவீர் என்றது.

பிறருடைய உயர்வை நோக்கி உள்ளம் சகியாதவன் தன்னை அவமே கீழாக்கிக் கொள்கின்றான். தான் இழிந்து அழிவதை அறிந்து கொள்ளாமல் ஊனமாய் ஒழிந்து போதலால் பொறாமையாளர் நிலை பெரிய பரிதாபமாய் முடிகின்றது.

தன்னை நாசப்படுத்தும் நீசப் பொறாமையை எவ்வழியும் அணுகாமல், ஒழுகி வருகிற மனிதன் விழுமிய நிலைமையை எளிதே அடைந்து கொள்கிறான்.

உள்ளத்தே செவ்வி யுடையான் உயர்நலங்கள்
வெள்ளத்தே காணும் விரைந்து.

இதனை உள்ளி உணர்ந்து உறுதி காண்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Aug-20, 10:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே