சேல கட்டிய மாதரை நம்பினால் - கட்டளைக் கலிப்பா

இசைப் பாடல்கள் - விவேக சிந்தாமணி 12
சேல கட்டிய மாதரை நம்பினால்!
கட்டளைக் கலிப்பா

ஆல கால விடத்தையும் நம்பலாம்
..ஆற்றை யும்பெருங் காற்றையும் நம்பலாம்!
கோல மாமத யானையை நம்பலாம்
..கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்!
கால னார்விடு தூதரை நம்பலாம்
..கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்!
சேல கட்டிய மாதரை நம்பினால்
..தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!

பொருளுரை:

மூச்சுக் காற்றில் வந்தாலே ஆளைக் கொல்லும் ஆலகால விசத்தை நம்பலாம்.

வெள்ளம் அடித்துச் செல்லும் ஆற்றை நம்பலாம்; சூறாவளிப் பெருங்காற்றையும் நம்பலாம்.

வளைந்தோடும் மதம் பிடித்த யானையை நம்பலாம். கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்.

உயிரைப் பறிக்க எமன் விடும் தூதரையும் நம்பலாம். கள்ளர், வேடர், மறவர் முதலான போராளிகளையும் நம்பலாம்.

மீன் போலும் அலைபாயும் கண்களை உடைய ஒழுக்கமற்ற பெண்களை நம்பினால் தெருவில் நின்று கொண்டு வாடித் தவிக்க வேண்டியது தான்.

விளக்கவுரை:

இப்பொழுது ‘சேலகட்டிய‘ என்பதன் கருத்தைப் பார்ப்போம்.

சேல் என்பது கயல்மீனைக் குறிக்கும். இந்தப் பாடலில் சேல் என்பது பெண்ணின் கண்களைக் குறிக்கின்றது.

சேலகட்டிய பெண்கள் என்றால் கண்களை அகட்டிய பெண்கள் என்று பொருள். அதாவது தனது கண்களை அகட்டிக் கவர்ச்சிகரமாகப் பார்க்கின்ற பெண்கள் என்பது கருத்தாகின்றது.

காதளவோடிய கண்கள், சேல்போன்ற கண்கள், கயல் பேன்ற விழிகளையுடைய பெண்கள் என்றெல்லாம் பெண்கள் வர்ணிக்கப் படுகின்றார்கள்.

அவையெல்லாம் அழகானவை. அந்தப் பெண்களுக்கு இயற்கையாகவே அமைந்தவை. அவர்களைச் ‘சேலகன்ற‘ மாதர் என்று சொல்லவேண்டும்.

ஆனால், ‘சேல் அகட்டிய‘ என்னும்போது ஒரு நோக்கத்திற்காகத் தாமாகவே கண்களை அகட்டிக் கவர்ச்சி காட்டுகின்ற பெண்கள் என்று நாம் கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட பெண்கள் யார்? அவர்கள்தான் கணிகையர் அதாவது விலைமாதர்!

எனவே விலைமாதரை நம்பி அவர்களோடு உறவு வைத்துக் கொண்டால் தெருவில் நின்று பிச்சை எடுக்க வேண்டிவரும், பிச்சையும் கிடைக்காமல் வருந்தித் தவிக்க வேண்டியும் வரும்.

ஆகவேதான் நம்பக்கூடாத பல விடயங்களைச் சொல்லி அவற்றையெல்லாம் நம்பினாலும் கூட, விலைமாதரை நம்பக்கூடாது என்று மனித சமுதாயத்திற்கு அறிவுரை சொல்லியிருக்கிறார் புலவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Aug-20, 7:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 238

சிறந்த கட்டுரைகள்

மேலே