கழுதைக் குரல்

நாகையிலே, ஒரு தாசி மிகவும் கர்ணகடூரமான குரலிலே பாடினாள். சகிக்க முடியாத அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டிருந்த கவிஞரிடம், 'பாடல் எப்படி?’ என்று ஒருவர் கேட்டுவிட்டார்! அப்போது பாடியது இது.

நேரிசை வெண்பா

வாழ்த்த திருநாகை வாகான தேவடியாள்
பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள் - காழ்த்த
கழுதைகெட்ட வண்ணான்கண் டேன்கண்டே னென்று
பழுதையெடுத்(து) ஓடிவந்தான் பார். 172

- கவி காளமேகம்

பொருளுரை:

"வாழ்வு சிறந்த அழகிய நாகைப் பட்டினத்திலே, உடற்கட்டுள்ள இந்தத் தாசியானவள், தன் பாழான குரலினாலே உரக்கப் பாடினாள். நேற்று வயது முதிர்ந்த தன் கழுதையைப் போக்கடித்து விட்ட வண்ணான்,"கண்டேன்! கண்டேன்' என்ற சொல்லியவனாக, ஒரு தடியையும் கையில் எடுத்துக் கொண்டவனாக, இவ்விடத்திற்கு ஒடோடியும் வந்தான். இந்த வேடிக்கையைப் பாருங்கள்.

'அவளுடைய குரல் கழுதையின் கத்துதலுக்குச் சமமாயிருந்தது' என்று சாதுரியமாகப் பழித்தார் கவிஞர். அவள் வெட்கித் தலை கவிழ்ந்தாள். கவிஞரை அபிப்பிராயம் கேட்ட வரும் அவளைத் தொடர்ந்தார்.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து

- அதிகாரம்:பகைத்திறம்தெரிதல் குறள் எண்:879

பொழிப்பு (மு வரதராசன்): முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Aug-20, 7:12 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே