திருந்திய மனம்  -  பாகம் 2

ஊட்டி வந்தடைந்தது பஸ் ஒருவழியாக. பேருந்து நிலையத்தில் ஒரே கூட்டமாக இருந்தது . அனைவரும் இறங்கிய பின்னர் இறுதியாக பாரியும் இலக்கியாவும் கீழிறங்கினர் . அதற்குள் அந்த வயதானவர் இறங்கி நின்று கொண்டிருந்தார். இவர்களைப் பார்த்ததும் தம்பி உங்களுக்காகத் தான் காத்திருக்கிறேன். நீங்கள் எங்கே தங்கப் போகிறீர்கள் என்று கூறினால் நான் விட்டு விடுகிறேன். நான் டாக்ஸியில் தான் செல்வேன் என்றார். அதற்கு பாரி இல்லை சார் பரவாயில்லை. எனது நண்பர் ஒருவர் ஏற்கனவே ஏற்பாடு செய்துவிட்டார் என்றும் நான் பார்த்து கொள்கிறேன் என்றான் . அங்கே ஒருவர் எனக்காக காத்துக் கொண்டுள்ளார் என்றான் . இலக்கியா உடனே பாரியை சற்று வித்தியாசமாக நோக்கினாள் . ஏதோ கேட்க வாயெடுத்தவளை பாரி கையை அழுத்தி பேசாமல் இருக்கும்படி சைகையில் கூறினான் . 


அப்படியானால்  உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என் வீட்டில் தங்கலாமே. வசதியாக இருக்கும். என்னுடன் வாட்ச்மேன் ஒருவர் அவுட் ஹவுசில் குடும்பத்துடன் இருக்கிறார். அவர் மனைவி தான் எனக்கு சமையல் செய்கிறார். உங்களுக்கு நல்ல உணவும் கிடைக்கும். அவன் உடனே இல்லை சார் பரவாயில்லை மிகவும் நன்றி. நாங்கள் மூன்று நாட்கள் தான் இங்கே இருப்போம். பிறகு மைசூர் செல்வதாக திட்டம் என்றான். அவரும் புரிந்து கொண்டு ,சரி தம்பி , உங்கள் விருப்பம் என்றார் . உடனே தனது விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுத்து இதை வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னை அழைக்க தயங்க வேண்டாம் என்றும் செல்போனில் அழையுங்கள் என்றார். ரொம்ப நன்றி சார் என்றான் பாரி .


அவர் விடை பெற்றதும் பாரி ஏதாவது ஒரு லாட்ஜை தேடி நடந்தே செல்ல ஆரம்பித்தான். இலக்கியா உன்னால் முடியுமா,அல்லது டாக்ஸியில் போகலாமா என்றதும் வேண்டாம் நடந்தே போகலாம் என்றாள். அப்போது அவள் என்ன பாரி , அவர் வீட்டிலேயே தங்கி இருக்கலாமே என்றாள் . வசதியாக இருக்கும் போல தெரிகிறதே என்றாள் . உடனே அவன் இல்லை இலக்கியா , நாமும் அவரும் வெவ்வேறு மதம் . நாம் இந்துக்கள் , அவர் முஸ்லீம் . நாம் சுத்த சைவம் என்று கூறிவிட்டேன் .  நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது . அதனால்தான் நாசுக்காக பொய் சொல்லி மறுத்துவிட்டேன் என்றான் . இலக்கியா அவனை சற்று குழப்பமாக பார்த்தாள் . இதிலும்  சாதிமதம் பார்ப்பவரா இவர்  என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
பனிமூட்டமும், பசுமையான சூழ்நிலையும் இருவரையும் பரவசமுட்டியதால் ஏதோ ஒரு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தான் பாரி. அவர்கள் மீது தவழ்ந்து சென்ற காலைத் தென்றலையும் சுகமாக ,ஆனந்தமாக சுவாசித்தனர் . 


ஊட்டி , மைசூர் மற்றும் பெங்களூர் என்று சுற்றிவிட்டு சென்னை திரும்பிவிட்டனர் பாரியும் இலக்கியாவும் . இரண்டு நாட்கள் கழித்து விடுமுறை முடிந்து அலுவலகம் ஒன்றாக புறப்பட்டார்கள் .சற்று தொலைவில் உள்ளது. இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்ததும் உடன் பணியாற்றும் சக நண்பர்கள் சிரித்துக் கொண்டே கேலியாக ஆளுக்கொன்று கூறினார்கள் . சிலர் வந்து கை குலுக்கிவிட்டு சென்றனர். ஒருவர் வந்து பாரி மன்னிக்கவும் அன்று உடல்நலமில்லை .அதான் வரமுடியவில்லை வாழ்த்துகள் இருவருக்கும் என்று ஒரு பரிசு பொருளை அவன் கையில் கொடுத்தார் . பாரியின் நெருங்கிய நண்பன் ஒருவன் அருகில் வந்து இன்று நமக்கு மதியம் சாப்பாடு இலக்கியா, பாரி அவர்களின்  கைங்கரியம் என்றான் . உடனே பலரும் அதை ஆமோதிப்பது போல சத்தமாக "ஓ" போட்டார்கள் சிரித்துக் கொண்டே. அவர்களும் அதை ஒப்புக்கொண்டனர் மகிழ்ச்சியுடன் . அன்று மாலை வீடு திரும்பிடும் முன் ஒரு பிரபல அங்காடிக்கு ( Mall ) சென்று சிறிது நேரம் கழித்துவிட்டு வீடு திரும்பினர் .


இரண்டு மாதங்கள் கழிந்தது .  இருவரும் ஆபிஸ் வேலையை முடித்து திரும்புகையில் கடற்கரை செல்லலாம் என்று திட்டமுடன் , அந்த அகன்ற சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர் . அப்போதுதான் எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்தது ....

எழுதியவர் : பழனி குமார் (20-Aug-20, 9:38 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 27

மேலே