திருந்திய மனம் - பாகம் - 3 

எழிலகம் அருகே சிக்னலுக்காக நின்றவர்கள் பச்சை விளக்கு எரிந்தவுடன் உடனே கிளம்பியபோது , இடது பக்கம் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது . அவர் அநேகமாக சிக்னல் மாறியதை கவனிக்கவில்லையா அல்லது அறிந்தும் உடனே கடக்க முயன்றாரர என்றும் தெரியவில்லை . பாரியின் வாகனத்தின் மீது நேராக மோதி விபத்துக்குள்ளானது . அதனால் இலக்கியா சற்று தூரம் தூக்கி அடிக்கப்பட்டு கீழே  விழுந்தாள் . பாரி நிலைகுலைந்து காரினுடனே சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு தலையில் பலத்த காயத்துடன் மயக்கமுற்றான் . அதற்குள் போக்குவரத்து அப்படியே நின்று விட்டது . சாலை ஓரமாக  நின்று கொண்டிருந்த சில போலீஸ்காரர்கள் ஓடி வந்தனர் . பொதுமக்களும் கூடிவிட்டனர் . சிலர் சத்தமாக அந்த கார் ஓட்டுனரை கோபமாக திட்டிக் கொண்டிருந்தனர் . உன் மீதுதான் தவறு , சிக்னல் மாறிய பிறகு எதற்காக அவ்வளவு வேகமாக திரும்பினாய் ...ஒருசிலர் அடிக்கவே சென்றனர் . அதற்குள் போலீஸ்காரர்கள் அவர்களை தடுத்தனர் . சிலர் இலக்கியாவை நோக்கி ஓடினார்கள் . அவளுக்கு நினைவு இருந்தது . கை கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்தது . ஒரு பெண் அவளை மெதுவாக கைத்தாங்கலாக தூக்கி அமர வைத்தார் . ஒருவர் தனது காரிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து குடிக்க சொன்னார் . அதற்குள் இலக்கியா மிகவும் மெல்லிய குரலில் அவருக்கு என்ன ஆயிற்று எங்கே அவர் என்று பாரியை பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள் . மேலும் அவளுக்கு லேசான காயம் என்பதால் எழுந்து நிற்க வைத்தனர் அருகில் இருந்தவர்கள் . 
கூட்டம் அப்படியே பாரியை சூழ்ந்து கொண்டு வேடிக்கை பாரத்தை கண்டவுடன் இலக்கியா அலற ஆரம்பித்தாள் . அழுகின்ற குரலில் அவருக்கு என்ன ஆயிற்று என்று கேட்டுக்கொண்டே அருகே சென்றாள் . அதற்குள் யாரோ ஒருவர் கோபமுடன் கத்தினார் . சீக்கிரம் 108 க்கு போன் செய்யுங்கள் சார் என்று . போலீஸ்காரர்கள் கூட்டத்தைசற்று விலகி இருங்கள் என்று கூறிக்கொண்டே கீழே குனிந்து பாரியை பார்த்து , உயிர் இருக்கிறது . மயங்கிவிட்டார் அதிர்ச்சியில் என்று ஒரு டாக்டர் போல பேசினார் . அவரும் இது போல நாளும் பார்த்து கொண்டுதானே இருக்கிறார்கள் .அந்த அனுபவம் என்று நினைக்கிறேன் . அவரே 108க்கு தகவல் கொடுத்தார் . அதற்குள் இலக்கியா ஓடிவந்து பாரி, பாரி என்று அழைத்தாள் .தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டே இருந்ததை பார்த்து ஓவென்று அழத் தொடங்கினாள் . பக்கத்தில் இருந்தவர்கள் அவளை தேற்ற ஆரம்பித்தனர். அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது . மிகவும் துரிதமாக செயல்பட்டார்கள் . இலக்கியா அதில் ஏறிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட மருத்துவ மனை பெயரை சொல்லி அங்கே வேகமாக செல்லும்படி கூறினாள் . மேலும் தனது கைப்பையில் இருந்த செல் போனை எடுத்து வீட்டுக்கும் தெரிந்த டாக்டருக்கும் தகவலை கூறினாள் . அப்போதுதான் கவனித்தாள் ....பாரியின் பர்ஸும் செல் போனும் காணவில்லை என்பதை . ஆனாலும் அதைப்பற்றி அந்த நேரத்தில் அவள் கவலைப்படாமல் பாரியையே பார்த்து அழுது கொண்டிருந்தாள் . பின்னாடியே இரண்டு போலீஸ்காரர்கள் வந்து கொண்டிருந்தனர் .
அந்த குறிப்பிட்ட மருத்துவமனை வந்ததும் அங்கிருந்த ஊழியர்கள் ஸ்ட்ரெச்சர்  மூலம் பாரியை படுக்க வைத்து அவசர சிகிச்சை அறைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் இலக்கியா அழைத்த அந்த மருத்துவரும் அங்கே தயாராக நின்று கொண்டு நர்ஸுகளிடம் ஏதோ அவசரமாக கூறிவிட்டு பாரியை பரிசோதிக்க ஆரம்பித்தார் . பிறகு நர்ஸிடம் உடனே  தலைப்பகுதியை ஸ்கேன் எடுங்கள் என்று கட்டளையிட்டார் . பின்பு இலக்கியாவை பார்த்து தலையில் தான் பலத்த காயம் . ஸ்கேன் வரட்டும் , ஆபரேஷன் தேவையா என்பதை முடிவு செய்யலாம் . ரத்தம் அதிகம் வெளியேறிவிட்டது . அதனால் அவர் மயங்கி இருக்கிறார் கவலை வேண்டாம் என்று ஆறுதல் கூறினார் . அதற்குள் பாரியின் அலுவலக நண்பர்கள் சிலரும் வந்துவிட்டனர் . பாரியின் மாமாவும் , இலக்கியாவின் பெற்றோர்களும் அங்கே வந்து சேர்ந்துவிட்டனர் . அவர்கள் கையை பிடித்து இலக்கியா மீண்டும் அழத் தொடங்கினாள் . அவளை சமாதானப்படுத்தி நடந்தவற்றையும் டாகடர் கூறியதையும் விளக்கமாக கேட்டறிந்தனர் அனைவரும் . அந்த அசாதாரண சூழ்நிலையால், ஆழ்கடல் போல அமைதி நிலவியது . 


ஸ்கேன் எடுத்து முடித்ததும் பாரியை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி அங்கே அனைத்து கருவிகளும் பொருத்தபட்டது . ( இதுதான் சாதாரணமாக நடக்கிறது இப்போது எங்கும். நல்ல நிலையில் இருந்தாலும் இதுதான் என்பது நாம் காணும் காட்சிகள் பொதுவாக ) இலக்கியாவும் அவள் தந்தையும் டாக்டரிடம் சென்று விவரம் கேட்பதற்காக அவர் அறைக்குள் சென்றார்கள் . அப்போது அவர் ஸ்கேனை எடுத்து பார்த்து ஆழ்ந்த யோசனையில் இருந்தார் . இவர்களை சைகையில் அமரும்படி கூறினார் .ஒன்றும் கவலைப்படாதீர்கள் , உயிருக்கு ஆபத்து இல்லை . ஆனாலும் தலைக்குள் இரத்தம் உறைந்து உள்ளது . ஆபரேஷன் செய்து நீக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் அவர் அசைவற்ற நிலையில் உணர்வின்றி  இருக்கிறார் . உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயத் தருணம்  இது .


மொத்தம் இரண்டு லட்சம் செலவாகும். நீங்கள் Mediclaim இருந்தால் அதன் மூலம் அங்குள்ள ஊழியரிடம் சென்று விசாரித்து பணம் செலுத்தலாம் என்று யோசனை கூறினார் . உடனே இருவரும் சார் , எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை ...நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் . தாமதமன்றி உடனடியாக அறுவை சிகிச்சைக்கு தயார் செய்திடுங்கள் என்று வேண்டினர் டாக்டரிடம் . சரியென்று கூறிவிட்டு அவர்களிடம் , 6 அல்லது 7 யூனிட் இரத்தம் தேவைப்படும். யாராவது நண்பர்கள் அல்லது  உறவினர்கள் இருந்தால் அவர் என்ன குரூப் என்று அறிந்து  கொண்டு ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அதற்குள் ஒரு நர்ஸ் வந்து அழைக்கவே வேறு ஒரு நோயாளியை பார்க்க எழுந்து சென்றார் . 

எழுதியவர் : பழனி குமார் (20-Aug-20, 9:40 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 29

மேலே